Breaking News

உலக வரலாறு அமெரிக்காவால் அக்கிரமான முறையில் திருத்தி எழுதப்பட்டு இருக்கிறது…! (ஆனந்த விகடன் நேர்காணல்)

மும்பை, கோவை குண்டு வெடிப்பு வழக்குகளில் தீர்ப்புகளின் சாதக பாதகங்கள் குறித்த விவாதங்கள் அரங்கேறிக்கொண்டு இருக்கின்றன. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தன்னை அரசியல் கட்சியாக மாற்றிக் கொண்டு, தேர்தலைச் சந்திக்கப் போவதாக கொள்கை முடிவு எடுத்திருக்கிறது. அதன் தலைவர் பேராசிரிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் இங்கே பேசுகிறார்…

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தேர்தலில் பங்கெடுக்கப் போகிறதாமே?

இஸ்லாமியர்களை எல்லாக் கட்சிகளும் வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கின்றன. தமிழகத்தில் எண்பதுகளில் நடந்த இரண்டு முக்கியமான சமூக நிகழ்வுகள்… ஒன்று, மீனாட்புரம் மதமாற்றம். இன்னொன்று, மண்டைக்காடு கலவரும். இந்தச் சம்பவங்களைப் பயன்படுத்திதான் தமிழகத்தில் இந்து முன்னணி கால் ஊன்றியது. அதன்பிறகு, இந்திய ஜனநாயகம் தந்த பேச்சுரிமையின் பெயரால் முஸ்லிம்களின் மன உணர்வுகளை மேடைகளில் சிலர் புண்படுத்தினார்கள். முஸ்லிம் லீக் கட்சி நினைத்திருந்தால் முஸ்லிம்கள் மீது பரப்பப்ட்ட தவறான குற்றச்சாட்டுகளையும் வன்முறைகளையும் தடுத்திருக்க முடியும். அவர்கள் அதைச் செய்யவில்லை. இந்நிலையில்தான், தமிழ்நாடு முஸ்லிம் முன்னற்றக் கழகத்தை நாங்கள் தொடங்கினோம். யாருக்கும் வளைந்து கொடுக்காமல், முஸ்லிம்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதிலும் ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதிலும் நாங்கள் குறிப்பிடத்தக்க வெற்றிகளைக் குவித்திருக்கிறோம்.

முன்பெல்லாம் முஸ்லிம்களின் பிரநிநிதித்துவம் தமிழக அரசியலில் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது. காயிதே மில்லத் போன்றவர்கள் எதிர்க்கட்சித் தலைவர்களாக இருந்த காலமெல்லாம் உண்டு. நாளடைவில் முஸ்லிம்களின் பங்களிப்பு குறைந்து, இப்போது இரண்டு அல்லது மூன்று பேர் மட்டுமே எம்.எல்.ஏ&க்களாகத் தேர்ந்தெடுக்கப்படும் சூழல் உருவாகியிருக்கிறது. நாடாளுமன்றத்துக்கு இங்கிருந்து முஸ்லிம் எம்.பிக்களே இப்போது இல்லை. எனவேதான், நாங்கள் தேர்தலில் பங்கெடுப்பது என்கிற கொள்கை முடிவை எடுத்திருக்கிறோம். தேர்தல் அமைப்புக்கு எப்போது வருவோம், எப்படி வருவோம் என்பதை விவாதித்து முடிவு எடுப்போம்.

முஸ்லிம்களுக்கு கிறிஸ்தவர்களுக்கும் 3.5 சதவிகிதம் இடஒதுக்கீடு அறிவித்திருக்கிறது தமிழக அரசு. இது முஸ்லிம்களுக்கு எந்தளவுக்கு பயன்படும்?

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இத்தனை ஆண்டுகளில் சமூகத்தின் இயல்பான வளர்ச்சி முஸ்லம்களைச் சென்றடைய வில்லை. இந்த உண்மை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சச்சார் குழு அறிக்கையில் தெளிவாக இருக்கிறது. இதற்கு முன்னர் கோலால் சிங் கமிட்டியும் இதுபோல ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

அரசு வேலைவாய்ப்புகளில் சமஒதுக்கீட்டின் அடிப்படையில் முஸ்லிம் மக்கள் நடத்தப்படவில்லை என்கிற யதார்த்ததை சச்சார் குழு தெரிவித்துள்ளது. போக்குவரத்து துறையிலும், காவல்துறையிலும் முஸ்லிம்களின் பங்கு ஒரு சதவிகிதத்துக்கும் கீழேதான் உள்ளது. தமிழகத்தைப் பொறுத்த வரை, 2001 வாக்கெடுப்பின்படி 5.6 சதவிகிதம் முஸ்லிம்கள் வாழவதாகச் சொல்கிறது அரசு ஆவணம். அதில் 4.1 சதவிகித முஸ்லிம்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்வதாகச் சொல்கிறது சச்சார் குழு அறிக்கை. இப்படியான சூழலில் தமிழக அரசு அறிவித்திருக்கும் இந்த ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு ஒரு வாய்ப்பு.

இஸ்லாமியர்கள் என்றாலே பயங்கரவாதிகள் என்பது போன்ற ஜ்ரு தோற்றம் உலகின் சில நாடுகளில் நீருவாகியிருக்கிறதே?

இந்த உலகத்தின் வரலாறு அமெரிக்காவின் அக்கிரமான முறையில் திருத்தி எழுதப்பட்டு இருக்கிறது. முஸ்லிம்கள் தேசத் துரோகிகள், பயங்கரவாதிகள் என்ற பிரசாரத்தை அமெரிக்காதான் தொடர்ந்து இராக்கையும் அழித்து நாசம் செய்து, லட்சக் கணக்கான மக்களைக் கொன்று குவித்திருக்கிறதே அமெரிக்கா… அதுவல்லவா பயங்கரவாதம்! இந்தியாவில் இந்துப் பரிவாரா அமைப்புகளால் இஸ்லாமிய மக்கள் பற்றிப் பொய்க் கதைகள் பரப்பப்பட்டு வருகின்றன.

கோவை, மும்பை தொடர் குண்டு வெடிப்பையும் அதில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் மரணத்தையும் நிச்சயம் நான் ஆதரிக்கவில்லை. கோவை குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 70 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. நான் இப்போது கேட்க விரும்புவதெல்லாம்… மும்பை குண்டு வெடிப்புக்கு முன்னர் 1992ல் அங்கே கிட்டத்தட்ட 2,000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டர்களே…! அதை விசாரித்த ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி, ‘ இந்தக் கொலைகளை ராணுவத் தளபதி போல முன்னின்று நடத்தியவர் பால்தாக்கரே’ எனக் குற்றம் சாட்டியதே- ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கை வந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இன்று வரை தாக்கரே மீதோ, சிவசேனா மீதோ ஒரு வழக்குகூடப் பதிவு செய்யப்படவில்லையே, ஏன்? கோவையில் காவலர் செல்வராஜைக் கொன்ற இளைஞர்களைச் சட்டம் பிடித்து தண்டிப்பதற்கு பதிலாக, ஒட்டுமொத்த முஸ்லிம் மக்கள் மீதும் தாக்குதல ஏவப்பட்டு, 21 அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்களே, அந்தக் கொலைகாரர்கள்மீது நடவடிக்கை இல்லையே, ஏன்-?

மிகச் சமீபத்தில் குஜராத்தில் நரேந்திரமோடி அரசின் துணையோடு ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டது தொடர்பான உண்மைகளைக் கொலைகாரர்களிடம் இருந்தே வாக்குமூலங்களைப் பெற்று தெஹல்கா வெளிக்கொண்டு வந்திருக்கிறது. நமது சமூக அமைப்பு மதச்சார்பு அற்றதுதான் என்றால், இதிலும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமே!

ஒரு அப்துல்லாவுக்கும் சுப்பிரமணியனுக்கும் வருகிற தனிநபர் சண்டைகூட இங்கே மத மோதலாக மாற்றக்கூடிய விபரீத சூழலை சில இந்து அமைப்புகள் உருவாக்கி உள்ளன என்பதுதான் வேதனையான உண்மை.

டி. அருள் எழிலன், ஆனந்த விகடன்- 21.11.2007

Check Also

பத்திரிகையாளர் மோசஸ் படுகொலை: மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் கண்டன அறிக்கை