லண்டன் பல்கலைக்கழக தமிழ்த்துறை மீண்டும் செயல்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!!
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
1916ஆம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்ட தமிழ்த்துறை கடந்த 20 ஆண்டுகளாக முடங்கியிருப்பது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. நிதிப் பற்றாக்குறை காரணமாக தமிழ்த்துறை செயல்படாமல் இருக்கும் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த பல்கலைக்கழக தமிழ்த்துறையின் நூலகத்தில் 150000 ஆவணங்கள், ஓலைச்சுவடிகள் மற்றும் நூல்கள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
லண்டன் பல்கலைக்கழக தமிழ்த்துறைக்கு இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த நேரத்தில் ஆங்கிலேய அரசு நிதி உதவி அளித்திருக்கின்றது. அந்நிதி தற்போது தீர்ந்துவிட்டதினால் இப்பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை முடக்கப்பட்டுள்ளது. இந்த அவல நிலையின் காரணமாக லண்டன் மாநகரத்தில் வாழக்கூடிய தமிழ் மக்களின் அடுத்த தலைமுறையினர் தமிழ் மொழியில் உயர்கல்வி பெற வாய்ப்பினை இழக்கும் சூழல் உருவாகி உள்ளது.
லண்டன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையை மீண்டும் செயல்படுத்துவதற்காக வைப்பு நிதியாக ரூ100 கோடி செலுத்த வேண்டும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்த தொகை திரட்டும் அற முயற்சியில் லண்டனில் வாழும் தமிழர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழக அரசும் இதற்கான முன்முயற்சிகளை எடுத்து புகழ்பெற்ற லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை உயிர்ப்பிக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.