Breaking News

தேசப்பற்றை நிறுபிக்க… இந்துத்துவா சக்திகளிடம் சான்றிதழ் பெறத் தேவையில்லை த.மு.மு.க தலைவர் ஜவாஹிருல்லாஹ் புதிய பார்வை நேர்காணல்…

முஸ்லிம் சமுதாயத்தினருக்காகப் பாடுபடும் இயக்கங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் தலைவர்.

தூத்துக்குடி அருகில் உள்ள உடன்குடி கிராமத்தைச் சேர்ந்த இவர் தற்போது வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமியா கல்லூரியில் பேராசிரியர். த.மு.மு.க என்றழைக்கப்படும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கு தமிழ்நாடு முழுக்க மூவாயிரம் கிளைகள் ஏறத்தாழ 4 லட்சம் உறுப்பினர்கள்.

பத்து நூல்கள் வரை எழுதியிருக்கிற இவர் பாலஸ்தீன வராற்றைப் பற்றி விரிவான ஆய்வு செய்து முதல் பாகத்தை வெளியிட்டிருக்கிறார். ‘அருட்செல்வன்’ என்ற புனை பெயரில் பாபர் மசூதியின் வரலாற்றுப் பின்ணணி குறித்து ஒரு நூலையும் எழுதியிருக்கிறார்.

2003இல் ஜெனிவாவில் ஐ.நாவின் மனித உரிமைகள் மாநாட்டில் இந்தய முஸ்லிம்களின் பிரதிநிதியாக கலந்து கொண்டு சிறுபான்மை சமுகத்தின் சமூக பொருளாதார நிலைமை பற்றிய ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்திருக்கிறார்.

‘பாபர் மசூதி இடிப்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், இடிக்கப்பட்ட அந்த இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்கிற கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் பாராளுமன்றம் முன்பு போராட்டத்தை சமீபத்தில் நடத்தி பிரதமரையும் சந்தித்திருக்கிறார். ஒரு தேசிய வார இதழ் தமிழகத்தின் நம்பிக்கைக்குரிய இளைய தலைமுறை சார்ந்த அரசியல்வாதிகளில் ஒருவராக இவரையும் தேர்ந்தெடுத்திருக்கிறது.

எம்.ஃபில் ஆய்வுக்காக இவர் தேர்ந்தெடுத்தத் தலைப்பு இணைய விளம்பரங்கள், இதையடுத்து வட்டியில்லா வங்கி டாக்டர் பட்டத்திற்காக ஆய்வை மேற்கொண்டிருக்கும் இவருக்கு ஒரே மகள்.

சென்னை மண்ணடி பகுதியில் நெரிசல் மிகுந்த மரைக்காயர் தெருவில் உள்ள த.மு.மு.க அலுவலகத்தில் அவரைச் சந்தித்தோம். சில மணி நேர அளவுக்கு நீண்டது அநத் நேர்காணல்.

அவற்றிலிருந்து சில பகுதிகள்…

என்னுடைய சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி. முதலாம் வகுப்பு வரை இங்குதான் படித்தேன். தமிழகம் முழுவதும் கருப்பட்டி, வெற்றிலைக்கு பேர் போன கிராமம். எங்க ஊரைச் சேர்ந்தவர்கள் சென்னையில் பல்வேறு துறைகளில் உயர்ந்த நிலையில் உள்ளார்கள். ஜலால் என்று ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி திருச்சி மாவட்ட ஆட்சித் த்லைவராக இருந்து குறுகிய காலத்தில் இறந்துபோனார். அவர் எங்கள் ஊரைச் சேர்ந்தவர்.

உடன்குடி ஒரு பேரூராட்சி. அங்கு 16 முஸ்லிம் தெருக்கள் உண்டு. இந்த ஊரில் எல்லா தெருக்களின் நடுவிலும் ஒரு பள்ளிவாசல் உண்டு. இந்தச் சிறப்பை தமிழகத்தில் வேறு எங்கேயும் பார்க்க முடியாது.

என்னுடைய தந்தைக்கு கொத்துவால் சாவடியில் வியாபாரம். வெல்லம், புளி மோத்த வியாபாரி. என்னுடன் கூடப் பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள் நான்தான் மூத்தவன். முதல் வகுப்புப் படித்த பிறகு சென்கைக்கு வந்துவிட்டேன். முதலில் பிராட்வேயில் இருக்கிற செயிண்ட் தாமஸ் மவுண்ட பள்ளியிலும், மூன்றிலிருந்து தொடர்ச்சியாக பதினோராவதுவரை செயிண்ட் மேரிஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியிலும் படித்தேன். நிறைய பத்திரிக்கை படிக்கிற பழக்கம் சிறுவயதிலேயே வந்துவிட்டது. குறிப்பாக தினமணியையும், ஹிந்துவையும் ஆறாம் வகுப்பு மாணவனாக இருக்கும் காலத்திலேயே படித்திருக்கிறேன்.

நாங்கள் மண்ணடியில் வசித்தோம். அங்கே ஒரு பள்ளிவாசல் இருக்கிறது. அதில் சொற்பயிற்சி மன்றம் ஒன்று தொடங்கப்பட்டது. ஒவ்வொரு வியாழன் இரவும் கூடி வெவ்வேறு தலைப்புகளில் பேசுவோம். சென்னை புதுக்கல்லூரியில்தான் பியூசி படித்தேன். அதே கல்லூரியில்தான் பி.காமும் படித்தேன். என்னுடைய பொது வாழக்கை 1979இல் தொடங்குகிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.

தி.மு.கவின் பொதுக்கூட்டங்கள் எங்கே நடந்தாலும் குறிப்பாக கலைஞர் பேசக்கூடிய கூட்டங்களில் ஆஜராகிவிடுவேன். இது என்னுடைய இளமைக்கால பொழுதுபோக்காக இருந்தது. அதேபோல முஸ்லிம் லீக் பொதுக்கூட்டங்கள் குறிப்பாக அப்துல் சமது, அப்துல் லத்தீப் அவர்கள் பேச்சையும் கேட்பதற்கு செல்வேன்.

1979 டிசம்பரில்தான் பொதுவாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறேன். அப்போது ஆப்கானில் சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பு நடந்த நேரம். அதைக் கண்டித்து இந்திய மாணவர் இயக்கத்தின் சார்பாக ஒரு ஊர்வலம் நடத்தினோம். நான் புதுக்கல்லூரி மாணவராக அதில் கலந்து கொண்டதோடு அந்த இயக்கத்தோடு என்னை இணைத்துக் கொண்டேன். ஒரு சாதாரண உறுப்பினராகச் சேர்ந்த சென்னை மாவட்டத் தலைவராக உயர்ந்து தமிழ்நாடு தலைவராகவும் பணியாற்றினேன். அடுத்து அகில இந்திய அளவில் அந்த இயக்கத்தின் தலைமை நிர்வாகக் குழுவில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

கல்லூரி படிக்கும்போதே இந்த பதவிகளில் செயல்பட்டீர்களா-?

புதுக்கல்லூரியில் பி.காம் படித்த பிறகு சென்னைப் பல்கலைக்கழகத்தில் Department of Management Studies துறையில் எம்பிஏ 1983ல் படித்து முடித்தேன். அதே ஆண்டில் இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தன் தமிழ்நாடு பிரிவின் தலைவராக பொறுப்பேற்கும் சூழ்நிலை ஏற்பட்டது. 1989 வரை அந்த அமைப்பில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.

அப்போது எம்.பி.ஏ முடித்ததும் யாரும் ஆசிரியர் பணிக்குப் போக மாட்டார்கள் அதற்கு நல்ல டிமாண்ட் இருந்த நேரம். இப்போது சுயநிதி கல்லூரிகள் பெருகிவிட்டதால் வேறு வேலைக்கு செல்கிற சூழல். நான் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் நிர்வாகத் துறையில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டேன். என்னுடைய இலட்சியம் பொதுப்பணி, செய்யக் கூடியதாக இருந்ததால் அந்தவேலையில் சேரவில்லை. சுதந்திரமாகப் பணியாற்ற வேண்டும் என்று ஆசிரியர் பணியை விரும்பினேன். அதுதான் நோக்கமாக இருந்தது. 1985இல் வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் நிறுவனச் செயலாண்மை பரிவுக்கு உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தேன். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தோடு இருபதாண்டுகள் கல்லூரிப்பணி நிறைவடைகிறது.

அந்தக் காலகட்டத்தில் அப்துல்சமது போன்ற தலைவர்களின் செயல்பாடு எப்படியிருந்தது?

1985க்கு முந்தைய காலகட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம் அரசியல் முஸ்லிம் அமைப்பு ஸ்ன்று சொன்னால் முஸ்லிம் லீக் மட்டும்தான் இருந்தது. 1967இல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி வீழ்த்தப்பட்டதற்கு முக்கியமான காரணம் காயிதே மில்லத்தின் முன் முயற்சியாக தி.மு.க, சுதந்திரா கட்சி, முஸ்லிம் லீக் கூட்டணி னீமைக்கப்பட்டதுதான். னீதனால் தி.மு.க னீட்சியைப் பிடிக்கக்கூடிய ஒரு நிலைமை ஏற்பட்டது அதற்கு பிறகு தொடர்ச்சியாக தி.மு.கவுடன்தான் முஸ்லிம் லீக் கூட்டணி ஏற்பட்டது. அடுத்து எம்.ஜி.ஆரை ஆதரிக்கும் நிலைக்குப் போனார்கள். அப்துல் லத்தீப் தனியாக போகக்கூடிய சூழ்நிலையும் வந்தது. 80 வரைக்குமான காலகட்டத்தில் முஸ்லிம் லீக் மட்டும்தான் மக்களுக்கு தெரிந்த ஒரு அரசியல் கட்சியாக இருந்தது.

இந்தியாவில் 80களும், 90களும் சிறுபான்மையினரைப் பொறுத்தவரை முக்கியமான ஒரு காலகட்டம் 1981இல் மீனாட்சிபுரத்தில் மதமாற்றம், தமிழ்நாட்டில் அதுவரை இல்லாத னீளவிற்கு இந்து முன்னணியினர் போன்ற கட்சிகளின் உதயம். வடநாட்டிலிருந்தும் தலைவர்களின் வருகை எல்லாம் நடந்தது.

1980க்குப் பிறகு முஸ்லிம் சமூகத்தினருக்கு ஒரு பாதுகாப்பற்ற உணர்வு தமிழ்நாட்டில் வந்ததா?

அதற்கு முன்பு கிடையாது. குறிப்பாக இராமகோபாலன் போன்றவர்கள் மேடை போட்டு நபிகள் நாயகத்தைப் பற்றியும், அவருடைய மனைவியர் பற்றியும் மிகக் கீழ்த்தரமான, ஆபாசமான ரீதியில் திட்ட ஆரம்பித்தார்கள். சென்னை புதுப்பேட்டையில் கூட ஒரு பட்டிமன்றம் ஏற்பாடு செய்தார்கள். காமவெறியில் விஞ்சி நிற்பவர் கதீஜாவா-? அன்னை மேரியா? மணியம்மையா? என்று பட்டிமன்றம் நடத்தக்கூடிய அளவிற்கு மோசமான நிலைமை.

அந்த நிலையில் படிப்படியாக முஸ்லிம்லீக், தேசிய லீக் பற்றிய பிடிமானம் அப்படியே தளர்ந்துகொண்டே வருகிறது. மக்கள் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அவற்கை கையில் எடுத்துக்கொண்டு தீர்வைத் தேடக்கூடிய பணியில் முஸ்லிம் லீக் இல்லை. சமுதாயக் கட்சிகள் என்று சொல்லிக் கொண்டே எந்தக் கட்சியும் அந்தச் சமுதாய மக்களுக்கு எதையும் செய்யவில்லை. இந்த இடைவெளி தொடர்ந்த இருந்துகொண்டே இருந்தது.

திராவிட இயக்கங்களும், முஸ்லிம் கட்சிகளும் இணைந்து ஆரம்பத்தில் செயல்பட்டு வந்திருக்கின்றன. 80களின் தொடக்கத்தில் இந்த உறவில் விரிசல் ஏற்பட்டதா?

தி.க, தி.மு.க போன்ற திராவிட இயக்கங்களுக்கும், இஸ்லாமிய சமுதாயத்திற்கும் ஒரு நெருங்கிய பிணைப்பு இருந்தது உண்மைதான். இன்னும் சொல்லப்போனால் தி.மு.க போன்ற கட்சிகளுடைய அடித்தளங்களை அமைத்துக் கொடுத்தது முஸ்லிம்¢ சமுதாயம்தான்.

முஸ்லிம்களின் ஓட்டு வங்கி தி.மு.க பக்கம்தான் பெருமளவு இருந்திருக்கிறதா?

அதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. தி.மு.கவின் பக்கம்தான் இருந்தது. அ.தி.மு.கவிற்கும் பிறகு போனது. ஆனால், இப்போது திரும்பிப் பார்க்கும்போது எங்களுடைய மனவருத்தம் என்னவென்றால் 67ல் விட்சிக் கட்டிலில் ஏற்றக்கூடிய செல்வாக்குப் பெற்றிருந்த முஸ்லிம் லீக், அதன் பிறகு சட்டமன்றத்தில் கணிசமான உறுப்பினர்களைப் பெற்றிருந்தும், ஆட்சியாளர்கள் தங்களுக்கு நெருக்கமாக இருந்தும்கூட முஸ்லிம்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்த முனையவில்லை. தேர்தல் வந்தால் நமக்கு சீட் தரணும், எம்.எல்.ஏக்களாக இருக்கணும் அல்லது வாரியங்களில் தலைவர் பதவியைப் பிடிக்கணும். அப்படிங்கற ஒரு எண்ணம்தான் இருந்ததே தவிர உருப்படியாக எதையும் செய்யவில்லை.

19ம் நூற்றாண்டின் இறுதியில் தீண்டாமை காரணமாக கிறித்தவ மதத்திற்கு மாறியதற்கான நிறையப் பதிவுகள் இருக்கின்றன. தோள்சீலை போராட்டம் நடந்ததற்கான வரலாறும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதே சமயம் இஸ்லாமிய மதத்திற்குப் பலர் மாறினாலும் அது பற்றி அந்த சமுதாயத்தில் ஏன் முறையான பதிவுகள் இல்லை?

நல்ல கேள்வி. பொதுவாக கல்வியைப் பொறுத்தவரை முஸ்லிம் சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய ஒரு சூழல். ஓரளவிற்குப் பதிவுகள் இருக்கின்றன. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே. ரிபாய் தென்காசியைச் சேர்ந்தவர். அவர் மதமாற்றத்தைப் பற்றி விரிவான ஒரு ஆய்வு நூலே எழுதியிருக்கிறார். அதில் பல சம்பவங்களைக் குறிப்பிடுகிறார். குறிப்பாக திருநேல்வேலி மாவட்டத்தில் அப்போதிருந்த சாதியக் கொடுமைகள், அவர்கள் கிறித்தவ மதத்திற்கு மாறிப்போகும்போது சர்ச்சுகளில்கூட அதே தீண்டாமை நடைமுறை பின்பற்றப்டுவதையும் இங்கேயும் இப்படி இருக்கிறதே என்று இஸ்லாத்திற்கு வருவதையும் அவரது நூலில் பதிவு செய்திருக்கிறார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில் தமிழ்நாட்டில் ஓர் அமைதியான சூழல்தான் நிலவியது. அந்த நேரத்தில் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் சூழலை எப்படி எதிர் கொண்டன?

1992 டிசம்பரில் பாபர் மசூதி இடிக்கப்ட்ட பிறகு மும்பையுடன் ஒப்பிடக்கூடிய அளவிற்கு இங்கு சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லை. பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை பொதுமக்கள் நடத்தினார்கள். கோயம்புத்தூர், அதிராம்பட்டிணம், மேலப்பாளையம், இங்கேயெல்லாம் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவிற்கு போராட்டம் தீவிராமாக இருந்தது. முஸ்லிம் லீக் மசூதி தகர்க்கப்பட்டதைத் தடுக்கத் தவறிவிட்டது என்று நினைத்தார்கள். அந்த விமர்சனம் வலிமையாக இருந்தது. முஸ்லிம் லீக்கைப் பொறுத்தவைரைக்கும் அதன் கிளைகள் இருப்பது கேரளாவிலும் தமிழ்நாட்டிலும்தான் மற்ற மாநிலங்களில் குறைவாக இருக்கிறது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது முஸ்லிம் மக்களின் கோபம் அத்வானி மீது இருந்ததைவிட, பால்தாக்கரே மீது இருந்ததைவிட பிரதமர் நரசிம்மராவ் மீதுதான் அதிகமாக இருந்தது. அவர் பிரதமராக இருந்தும் தடுக்க முடியவில்லையே என்ற வருத்தம் பாபர் மசூதி இடித்த அன்று முஸ்லிம் தலைவர்கள் ராவைச் சந்தித்தார்கள். அந்தக்குழுவில் முஸ்லிம் லீக்கின் அன்றைய தலைவராக இருந்த இப்ராகிம் சுலைமான் சேட்டும் போகிறார். Mr. Rao you do not have any right to sit in the chair even for a single minute more. You failed in your duty என்று நேருக்கு நேராகவே சொன்னார்.

அன்றைக்கு கேரளாவில் கருணாகரன் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் முஸ்லிம் லீக்கும் இடம்பெற்றது. அந்த ஆதரவை வாபஸ் வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கிறார்கள். அவர்கள் மறுக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்த வரைக்கும் முஸ்லிம் லீக்கிற்கான ஆதரவு இன்னும் பெரிய அளவில் சரிவதற்கான இந்தச் சம்பவம் காரணமாக இருந்தது. தேசிய லீக் ஃபார்ம் ஆவதற்கும் வாய்ப்பாக அமைந்தது. முஸ்லீம் லீக்கின் தலைமை மக்களின் மனப்போக்கை பிரதிபலிக்காததால் அவர்கள் முழுமையாகத் தனிமைப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

த-.மு.மு.கவை ஆரம்பிக்க எந்தவிதமான தேவை அப்போது இருந்தது?

ஒரு தீமை நடந்தால் நன்மை கடக்கும் என்பது போல 1980களில் சிறுபான்மை சமுதாயத்திற்கு எதிராக ஏற்பட்ட சூழல்கள், அரசியல் நிகழ்வுகள் எல்லாம் ஒரு விஷயத்தை தெளிவாக சுடடிக்காட்டின. இந்த சூழலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற தெளிவான ஒரு வரையறை கொண்ட திட்டமுள்ள முஸ்லிம் சிறுபான்மை அமைப்பு இந்தியாவில் இல்லை என்ற உண்மை தெரியவந்தது. நம் நாடு ஒரு ஜனநாயக நாடு; மதச்சார்பற்ற நாடு சிறுபான்மையினர்களுக்காக ஏராளமான உரிமைகளைத் தரக்கூடிய நாடு. உரிமைகள் மறுக்கப்படும் மக்களுக்குப் போராட்டம் நடத்துவதற்கு வழிவகைகளையும் செய்யக்கூடிய ஒரு சூழல் இந்தியாவில் இருக்கிறது. இந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி முஸ்லிம்களை ஒன்றுதிரட்டி அவர்களின் உரிமைகளுக்காகப் போராடக்கூடிய அமைப்பு இல்லை ஸ்ன்ற சூழல் நிலவியது.

நான் பணியாற்றிய இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு ஜனநாயக ரீதியில் ஓட்டுப் போட்டால் பிரயோஜனம் இல்லை என்ற கருத்தைக் கொண்டிருந்தது. இதன் கடைசிக் காலத்தில் 1989இல் அந்த இயக்கத்தை வழிநடத்தியவர்களில் முக்கியமானவர்கள். நாம் எடுத்துள்ள முயற்சிகள் இந்தியச் சூழலுக்குப் பொருந்தாது என்று நினைத்தோம். மக்களை ஒன்றுதிரட்ட ஜனநாயக ரீதியில் போராட வைத்தால்தான் உரிமைகளைப் பெறமுடியும். அரசியலில் அழுத்தம் கொடுக்கக்கூடிய ஒரு குழுவை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

நேரடி அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற சந்தர்ப்பம் உருவானதா?

நேரடியாக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர மற்ற அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்ற எண்ணம்கூட இருந்தது. ஆயுதம் ஏந்திய போராட்டங்கள் எல்லாம் சமுதாயத்திற்கு நன்மை விளைப்பதைவிட தீமைதான் அதிகம் விளைவிக்கிறது. அப்படி இந்த மனநிலைதான் எங்களைப் போன்றவர்களுக்கு இருந்தது.

தமிழ்நாட்டில் ஜனநாயக ரீதியாக பல முயற்சிகள் செய்தோம். வெளிப்படையாகச் சொல்லவேண்டும் என்றால் 1992 டிசம்பரில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. 1993 மார்ச்சில் இப்போது த.மு.மு.க இயங்குவது போல அல்உம்மா தொடங்கப்பட்டது. இதை இப்போதுள்ள அல்உம்மாவோடு சம்பந்தப்படுத்தி குழப்பிக்கொள்ளக்கூடாது. னீந்த அல்உம்மா தொடங்கப்பட்டதன் நோக்கம் ஒவ்வொரு ஊருக்கும் போக வேண்டும், சமூக ரீதியான பாதுகாப்பும் முஸ்லிம்களுக்குத் தேவை, அதற்கான ரீதியில் போராட வேண்டும் என்று நிறுவினோம். அதன் நிறுவனர்களில் நானும் ஒருவன். கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ், பாட்சாவும் உண்டு. மார்ச்சில் சந்திக்கிறோம். ஏப்ரலில் செயல்பட ஆரம்பிக்கிறோம். எல்லாவற்றையும் வெளிப்படையாகவே செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் செயல்பட்டோம்.

1993 ஆகஸ்டில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் குண்டுவெடிப்பு நடைபெறுகிறது. அதில் பாட்சா சம்பந்தப்படவில்லை. மற்றவர்கள் சம்பந்தம் என்று சொல்லி கைது செய்யப்படுகிறார்கள். கடைசியில் பாட்சாவும் involve என்று சொல்லி கைது செய்யப்படுகிறார். இனி இந்த அமைப்பைத் தொடர்வதில் எந்தப் பயனும் இருக்காது என்று சொல்லி அல்உம்மா அமைபபைக் கலைத்துவிட்டோம். யார் நிறுவினார்களோ அத்தனை பேரும் சேர்ந்து கோயம்புத்தூரில் தீபாவளி தினத்தன்று கூடி அந்த அமைப்பைக் கலைத்தோம். அமைப்பு தொடங்கிய நான்கு மாதங்களிலேயே கலைந்து விட்டது.

அதன்பிறகு 1994-95 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பல நேரங்களில் பலதரப்பட்ட மக்களையெல்லாம் சந்தித்து ஒரு மாற்று இயக்கம் உருவாக வேண்டும் என்பதை எடுத்துச் சொன்னோம். தமிழ்நாட்டில் வினாயகர் ஊர்வலங்கள் என communal சூழ்நிலை தொடர்ந்து பதற்றமாகத்தான் இருந்தது. சென்னையில் வினாயகர் ஊர்வலத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவிற்குப் போயிருக்கிறது நிலைமை.

என்னுடன் கல்லூரியில் பணியாற்றக்கூடிய ஒரு முஸ்லிம் பேராசிரியர் சென்னை ராயபுரத்தைச் சேர்ந்தவர். அவர் சொன்னார்: ‘பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் வினாயகரை வைத்து வழிபடுவார்கள். அப்புறம் மறுநாள் தனியாக ஞாயிற்றுக்கிழமையில் நண்பர்களோடு சேர்ந்து வேடிக்கை பார்க்க கடற்கரைக்குச் செல்வோம். இன்று அதையே பெரிய ஊர்வலமாக்கி, சமூக நிலையைப் பாழ்படுத்தக்கூடிய அளவிற்கு கொண்டு வந்துவிட்டார்கள்.

அப்போது அ.தி.மு.க ஆட்சிக்காலம். தடா சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. நாகூர் கலவரம் வேறு. அந்த தர்காவுக்கு வந்தவர்களையேல்லாம் தீவிரவாதிகள் என்று கைது செய்தார்கள். சில நேரங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் தர்காவுக்கு வருவார்கள். அவர்களையும் சேர்த்து திருச்ச¤ சிறையில் அடைத்தார்கள். இந்த மாதிரியான சூழலில்தான் த.மு.மு.க ஸ்ன்ற அமைப்பை உருவாக்க வேண்டும் என்று ஒன்று கூடுகிறோம். என்ன சூழல் என்றால் பாட்சா தடா சட்டத்தின் கீழ் 1995 ஆகஸ்ட் 15ஆம் தேதி கைது செய்யப்படுகிறார். தொடர்ச்சியாக பலரும் கைது செய்யப்படுகிறார்கள்.

எந்த முகாந்திரத்தில் அவர் கைது செய்யப்படுகிறார்?

மதுரையில் ராஜகோபாலன் படுகொலையில் ராஜா உசேன் என்பவருக்கு இவர் அடைக்கலம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்படுகிறார். இப்போதைய த.மு.மு.க மாநில துணைத் தலைவரான அப்துல் ஜலால் வீட்டில்தான் கூடுகிறோம். அன்று பா.ம.க மாநிலப் பொருளாளராக இருந்த குணங்குடி ஹனிபா, பி.ஜெய்னுலாபுதீன், ஹைதர் அலி, முன்னாள் இந்திய மாணவர் பொதுச் செயலாளர் அப்துல் சமது, நிஷார் அகமத், இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்த ஜாபர் ஜமாலுதீன், ஜாகிர் உசேன் இப்படி பதினைந்து பேர் சேர்ந்து பேசி முடிவு செய்தோம்.

முதலில் ஜனநாயக ரீதியில் தடாவை எதிர்த்து கோட்டையை நோக்கி ஒரு பேரணி நடத்தலாம் என்று முடிவு செய்தோம். இந்த அமைப்பிற்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்ற நிலை வருகிறபோது குணங்குடி ஹனிபா ஏற்கெனவே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற பெயரை வைத்திருந்தார். எம்.ஜி.ஆர். முதலமைச்சராக வேண்டி பல்வேறு சமூகங்களைச் சார்ந்தவர்களை கோட்டைக்கு அழைத்துப் பேசினார் அல்லவா–? அப்போது குணங்குடி ஹனீபா த.மு.மு.க சார்பாக கலந்து கொண்டிருக்கிறார்.

எந்த ஆட்சபணையுமில்லாமல் அதே பெயரை வைத்தோம். குணங்குடி ஹனீபா தலைவர், நான் துணைத் தலைவர், அப்துல் சமது பொதுச் செயலாளர், நிசார் அகமது பொருளாளர், ஹைதர் அலி தலைமை நிலையச் செயலாளர், பி.ஜெனுலாபுதீன் அமைப்பாளர் என இந்தக் குழு நியமிக்கப்பட்டது.

ஒரு குறுகிய காலத்தில் இந்தப் புதிய அமைப்பிற்கு மக்களிடம் எப்படி செல்வாக்கை ஏற்படுத்த முடிந்தது?

இந்த அமைப்பை உருவாக்கிய ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட செல்வாக்கும் பின்னணியும் இருந்தது. என்னைப் பொறுத்தவரைக்கும் இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தில் பணியாற்றியவன். இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்திற்கும் தமிழ்நாடு முழுவதும் பரவலாக நல்ல செயல்வீரர்கள் உண்டு. இப்படியொரு அமைப்பில் பேரணி ஒன்று நடத்தப் போகிறோம் என்றதும் இரவு பகல் பாராது அனைவரும் உழைத்தார்கள். தடாவை எதிர்த்து அந்த பிரமாண்டமான பேரணி நடந்தது. இறுதியில் அரசின் தலைமைச் செயலாளர் ஹரி பாஸ்கரை சந்தித்து மனு கொடுக்கிறோம். இதுதான் தொடக்கம்.

கோவை குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு பிறகு எல்லா இஸ்லாமிய இயக்கங்களும் ஒருவிதமான நெருக்கடியைச் சந்தித்தனவா?

கோவையில் 1998&ல் நடைபெற்ற குண்டு வெடிப்பைப் பற்றித்தான் பரவலாக பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அந்தக் குண்டு வெடிப்பிற்கு முன்னால் 1997 நவம்பர் 28ஆம் தேதி கான்ஸ்டபிள் செல்வராஜ் கொல்லப்பட்டது; அதைத் தொடர்ந்து 19 முஸ்லிம்கள் 3 முஸ்லிம் அல்லாதவர்கள் மொத்தம் 22 பேர் கொல்லப்பட்டார்கள். சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இது என்னுடைய பொதுவாழ்க்கையில் மறக்கமுடியாது சம்பவம்.

கோயம்புத்தூர் பற்றியெரிந்து கொண்டிருக்கிறது. குணங்குடி ஹனீபா 1995 ஆகஸ்ட்டில் ஆரம்பித்து 1996 மார்ச் வரைக்கும் தான் தமுமுக தலைவராக இருந்தார். சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் விலகி தமிழ்நாடு முஸ்லிம் மக்கள் கட்சி ஸ்ன்று தனிக்கட்சி அமைக்கிறேன் என்று சொல்லி போய்விட்டார். 96 மார்ச்சிலிருந்து தமுமுக தலைவராக இருந்தேன். 97இல் ஒரு நெருக்கடியான நேரம். இன்னும் சொல்லப்போனால் தமுமுக பிறப்பிலிருந்து தொடர்ச்சியாக பல நெருக்கடியான நேரம். இன்னும் சொல்லப்போனால் தமுமுக பிறப்பிலிருந்து தொடர்ச்சியாக பல நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது. ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு சம்பவம் ஏற்பட்டால் தமுமுகவிற்கு தடை வரப்போகிறது என்ற பேச்சுதான் வரும்.

முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்தும் பாபர் மசூதி பிரச்னையில் நீதி வேண்டியும் டிசம்பர் 6, 1997இல் சென்னையில் பேரணி, சீரணி அரங்கத்தில் மாநாடு என்று அறிவித்தோம். சென்னை மாநகர காவல்துறை கமிஷனராக இருந்த ராஜகோபால் பேரணிக்கும், மாநாட்டிற்கும் அனுமதியும் கொடுத்துவிட்டார். எங்களுடன் பல சுற்றுகள் பேச்சுவார்த்தை நடத்தி பேரணிக்கான ரூட்டெல்லாம் முடிவு செய்து கொடுத்தார். இந்தச் சமயத்தில்தான் செல்வராஜ் படுகொலை நடைபெறுகிறது. மிக கண்டிக்கத்தக்க ஒரு படுகொலை.

அன்றிரவே தள்ளுவண்டியில் பொருட்களை விற்றுக் கொண்டிருந்த முஸ்லிம் கடைகள் எல்லாம் அடித்து நொறுக்கப்படுகின்றன. எரிக்கப்படுகின்றன. பொள்ளாச்சியில் ஒரு பொதுக்கூட்டத்தை முடித்து எங்கள் நிர்வாகிகள் வரும்போது அன்றிரவே கடைகள் எரிவதைப் பார்க்கிறார்கள். மிக மோசமான மனித உரிமை மீறல் நடைபெற்றது.

நானும், பொருளாராக இருக்கிற அஹமத்துல்லா மற்ற சிலரும் கோவை நோக்கிப் போகிறோம்.

19 உடல்களையும் பெற்று கோட்டைமேடு பள்ளிவாசலில் வைத்து இஸ்-லாமிய முறைப்படி சுண்ணாம்புக் கால்வாயில் அடக்கம் செய்கிறோம். அந்த ஊர்வலத்திற்கு ஜ.ஜியாக இருந்த ராகவன்தான் பொறுப்பாக இருந்தார். அந்த ஊர்வலம் என்னுடைய தலைமையில், தமுமுக தொண்டர்கள் முழுக் கட்டுப்பாட்டின்கீழ் மிக அமைதியாக நடந்தது. கலவரம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் வீடியோவில் பதிவு செய்திருக்கிறோம்.

ஒரு குறிப்பிடத்தக்க நல்ல அதிகாரியாக அப்போதைய மாவட்ட ஆட்சியர் சந்தானம் விளங்கினார். அதை நான் குறிப்பிட வேண்டும். அந்தக் கலவரம் தொடர்பான புகார்க¬யெல்லாம் கொண்டுபோய் ழிபிஸிசி சேர்மன் வெங்கட் செல்லையாவிடம் கொடுத்தோம். அந்தப் படங்களைப் பார்த்துவிட்டு ARE WE Living in india or Uganda? என்று கேட்டார்.

கோகுலகிருஷ்ணன் தலைமயில் விசாரணை கமிஷணை மட்டும் தமிழக அரசு நியமித்தது. இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யவோ ஸ்டிரைக் செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை ஸ்டுக்கவோ தமிழக அரசு முன்வரவில்லை. மனித உரிமை அமைப்புகளிடம் புகார் செய்தோம் We look in to that என்றார்கள்.

த.மு.மு.கவைப் பொறுத்தவரை காவலர் செல்வராஜ் கொலையை மிக வலிமையாக கண்டனம் செய்திருக்கிறது. கோவை குண்டு வெடிப்பையும் கண்டனம் செய்திருக்கிறோம். குண்டுவெடிப்பு என்பதி எதிரி யாரேன்று சிலருக்குத் தெரியாமல் வைக்கப்படக்கூடிய தாக்குதல். அதில் அப்பாவிகள் பலியாகக்கூடிய வழிகள் இருக்கின்றன. இஸ்லாம் எந்த வகையிலும் அதை ஏற்றுக் கொள்ளாது. ஒரு தனிமனிதனைக் கொல்வது முழு சமுதாயத்தையும் அழிப்பது போன்றது என்பதுதான் இஸ்லாத்தின் நிலைபாடு. ஸ்ந்த வகையிலும் அந்த குண்டுவெடிப்புகளை நியாயப்படுத்த முடியாது.


உங்களைப் போன்ற அமைப்புகளுக்கு எந்தவிதமான நெருக்கடிகள் ஏற்பட்டன?

எங்கள் அமைப்பிற்கு மட்டுமல்ல; பொதுவாக ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையெ ஒரு குற்றவாளியைப் பார்ப்பது போன்ற நிலைமைதான் ஏற்பட்டது. ஒரு சூட்கேசை எடுத்துக்கொண்டு பஸ்ஸ்டாண்டில் டாய்லெட் போகக்கூட முடியாத சூழல் ஏற்பட்டது. எனக்கும்கூட பர்சனலாக அந்த அனுபவம் உண்டு.

குண்டிவெடிப்பிற்கு பிறகு மிகப்பெரிய நெருக்கடிகளை த.மு.மு.க சந்தித்தது. கோவையில் குண்டுவெடித்த சில மணி நேரங்களில் சென்னை அலுவலகப் பணியில் இருந்த நான், துணைத் தலைவர் அப்துல் ஜலீல், மாநிலச் செயலாளர் சாதிக் மூன்று பேரும் கைது செய்யப்பட்டோம். அதைத் தொடர்ந்து எங்கள் அலுவலகம், வீடுகளில் சோதனைகள். இக்கட்டான ஒரு காலகட்டத்தை எதிர்நோக்கினோம்.

எந்த அடிப்படையின்கீழ் கைது சம்பவங்கள் நடந்தன? அந்தக் காலகட்டத்தில் இந்துத்துவா அமைப்புகள் த.மு.மு.கவை மிகக் கடுமையாக விமர்சனம் செய்தனவே-?

அதற்கு காரணம் தமிழக அரசின் ஒரு சார்பான நடவடிக்கைதான். முதல்வராக அப்போதிருந்த கலைஞர் கோபிச்செட்டிபாளையம் பகுதியில் சிலையைத் திறந்து வைப்பதற்காக செல்லக்கூடியவரால் கோயம்புத்தூருக்குள் போய் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு விறுதல் சொல்லக்கூடப் போகமுடியாத ஒரு சூழ்நிலை. எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலைமை. இந்தக் கலவரத்தில் எந்த நீதியும் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் முஸ்லிம் மக்களுக்கு இருந்தது.

வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போன்று ஜனநாயக ரீதியில் மக்களை நெறிப்படுத்தி உரிமைகளை நாம் வெல்லாம் என்று நம்பிக்கை கொடுக்கக்கூடிய அமைப்பின் மீதும் தேவையில்லாத அவதூறுகளை உண்டு பண்ணினா£ர்கள். தமுமுகவை தடை செய்ய நினைத்தார்கள். த.மு.மு.கவுடன் பழகக்கூடிய அதன் நடவடிக்கைகளைப் பார்க்கக்கூடிய சில நேர்மையான அதிகாரிகள் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ‘ஜனநாயக முறையில் செயல்படக்கூடிய ஓர் னீமைப்பு தமுமுக; குண்டு வெடிப்பிற்கும், இந்த அமைப்பிற்கும் எந்தத் தொடர்புமில்லை’ என்று சொல்லித் தடையை நீக்கினார்கள். அவர்களின் சந்தேகத்தைப் போக்கக்கூடிய வகையில் எங்களை கைது செய்தார்கள். ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் உள்ள தமுமுக நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்கள் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

1997 கலவரத்திற்குப் பிறகு பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான நிவாரணம் வழங்கப்பட்டதா?

இன்னும் தெளிவாக மனதில் இருக்கிறது. பத்தொன்பது உடல்களையும் அடக்கம் செய்துவிட்டு அந்த மயான பூமியில் அன்றிருந்த கலெக்டர் சந்தானம், ராகவன், ஜெகன் சேஷாத்ரி போன்ற உயர் காவல்துறை அதிகாரிகள் இருந்தார்கள். நாஞ்சில் குமரன் கமிஷனராகப் பொறுப்பேற்நிருந்தார். அந்த நேரத்தில் மக்கள் மத்தியில் நீரையாற்றும்போது சொன்னேன். ‘நல்ல அதிகாரிகள் இப்போது பொறுப்பிற்கு வந்திருக்கிறார்கள். கண்டிப்பாக இவர்கள் நீதியைப் பெற்றுத்¢ தருவார்கள் ஒரு நம்பிக்கை. ஒரு நம்பிக்கை இருக்கிறது’ என்றேன். ஆனால் ஆட்சியாளர்கள் சரியான ஒத்துழைப்பைக் கொடுக்கவில்லை.

அதோடு நேரடியாக அல்-உம்மா இயக்கத்தினர் குற்றம் சாட்டப்பட்டார்களா?

நான் குறிப்பிட்ட மாதிரி ஆர்.எஸ்.எஸ் அலுவலக குண்டுவெடிப்பிற்குப் பிறகு அல்உம்மா கலைக்கப்பட்டது. பாட்சா சிறையில் அடைக்கப்பட்டார். 97 ஜனவரியில் விடுதலை செய்யப்படுகிறார். வெளியில் வந்த பிறகு மீண்டும் அல்-உம்மா என்ற அமைப்பைத் தொடங்குகிறார். அவர் தொடங்கிய அல்-உம்மாவிற்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.

இருந்தாலும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின்மீது அந்தப் பழி விழுந்ததை உணர்ந்தீர்களா?

இதை ஊடகங்களின் உருவாக்கம் என்றுதான் சொல்வேன். ஏனென்றால் ஊடகங்கள் பொறுப்பு வாய்ந்த சமூகத்தின் ஓர் அமைப்பாக இருக்கின்றது. எல்லோரையும் நான் குறை சொல்ல மாட்டேன். There will be glorious exceptions. கோயம்புத்தூரில் ஒரு சம்பவம் நடந்தது. அல்உம்மாவைச் சார்ந்தவர்கள் அந்தத் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்று சொல்லாமல் முஸ்லிம் தீவிரவாதிகள் ஈடுபட்டார்கள் என்று சொல்லி அதை முஸ்லிம்களோடு சம்பந்தப்படுத்துவது உலக அளவில் இருக்கிறது.

அமெரிக்காவில் செப்.11 சம்பவத்திற்குப் பிறகு சர்வதேச அளவிலும் இப்படி ஒரு முத்திரை விழுந்துவிட்டதே?

டோனிபிளேயர்கூட ‘இதற்கும் மதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்று அறிக்கை விட்டார். அதைவிட மிகத் தெளிவாக ஸ்டேட்மெனடை இலண்டண் மாநகர காவல்துறை ஆணையாளர் சொன்னார்: Don’t call them islamic or muslim terrorist’ அதனுடைய தாக்கம் நம் தமிழ்நாட்டிலேயும் இருக்கிறது. சமுதாயத்தின் மிகப்பெரிய பகுதி இந்தச் செயல்களை அங்கீகரிக்காதபோது அந்தப் பழியை மட்டும் அவர்கள் தலையில் சுமத்துவது எந்தவகையிலும் நியாயமில்லை.

ஈராக், அபுகிரைப் சிறையில் நடந்த சித்ரவதைகள்… முஸ்லிம் நாடுகள் மீதான ஆக்கிரமிப்பு என இஸ்லாமிய நாடுகளுக்கு எதிராக நடந்த ஆதிக்கம் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டாலும், அமெரிக்காவிற்கு ஆதரவான மனநிலையில்தானே பார்க்கப்படுகிறது?

அமெரிக்காவிற்கு ஆதரவான மனநிலையில்தான் பார்க்கப்படுகிறது. வளைகுடா நாடுகளில் மக்களின் பெரும்பகுதியினர் அமெரிக்காவின் போக்குக்கு எதிராகத்தான் இருக்கிறார்கள். அவர்களுடைய சூழலில் தங்களுடைய எதிர்ப்புகளை காட்டக்கூடிய ஒரு நிலைமை இல்லை. அதையும் மீறி எதிர்ப்பைக் கூட்டி வருகிறார்கள்.

இரண்டாவது சில மேற்கத்திய ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் கூட உதாரணமாக ராபர்ட்பிர்ஸ்க் இன்டிபெண்டண்ட்’ இதழின் மத்தியக் கிழக்கு நாடுகளின் நிருபர் ஜான் இவர்களைப் போன்றவர்களெல்லாம் மிகத் தெளிவாக நியாயத்தின் பக்கம் நின்று குரல் கொடுக்கிறார்கள். பத்திரிகையாளர்கள் ஒரு பக்கச் சார்பாக இல்லாமல் செய்திகளைத் தருவதுதான் மரபாக இருக்க வேண்டும்.

மேற்கத்திய நாடுகளிலும் சில exceptions இருக்கின்றன. அங்கேயுள்ள ஊடகங்கள் அமெரிக்காவை எக்ஸ்போஸ் செய்திருக்கிறார்கள். உதாரணமாக அபுகிரைப் சிறைக் கொடுமைகளை ஒரு அமெரிக்க மீடியாதான் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. அந்தக் கடமைகளை அவர்கள் ஒரு பக்கம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்தச் சூழலில் தேசியத்திற்கும் இந்துக்களுக்கும் நெருக்கம் அதிகம் போலவும், முஸ்லிம்கள் தேசியத்திலிருந்து விலக்கி வைக்கக்கூடியதுமான நிலைமை இருக்கிறதே-?

தேசியத்தைப் பற்றி, நாட்டுப்பற்றைப் பற்றி நாங்கள் யாரிடமும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு நிலையில் இல்லை.அதற்கு இந்துத்துவாவின் சான்றிதழ் எங்களுக்குத் தேவையில்லை. வெள்ளையர்களுக்கு எதிராக நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்களுடைய பங்கு மிக அளப்பரியது.

சிப்பாய் கலகத்தில் முஸ்லிம்கள் மிகப் பெரிய பங்காற்றி இருக்கிறார்கள். குறிப்பாக கமலஹாசன் ஸ்டுக்க முயற்சித்த மருத நாயகம் படம் வந்தால் மங்கள் பாண்டே மங்கிப்போயிருப்பார் என்று சொல்கிற அளவிற்கு விடுதலைப் போராட்டம் நெடுக முஸ்லிம்களின் பங்களிப்பு இருந்திருக்கிறது.

21இல் ஒத்துழையாமை இயக்கத்தை காந்திஜி அறிவிக்கும்போது வெள்ளையர்கள் கொடுத்த பட்டங்கள், பதவிகள் எல்லாவற்றையும் துறக்க வேண்டும் என்று சொல்கிறபோது அத்தனையும் துறந்தவர்கள் முஸ்லிம்கள். ஆங்கிலேயரை எந்த அளவிற்கு இன்று இடஒதுக்கீடு கேட்டு போராடுகிறோம் என்றால் இந்தக் கல்விப் பின்னணி இல்லாது பின்தங்கியிருப்பதுதான் காரணம். குஷ்வந்த் சிங் வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் தங்களுடைய மக்கள் சதவகிதத்தைவிட அதிகமானவர்கள் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்திருக்கிறார்கள்.

நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் எழுதிய நூலில் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்: ‘இந்தியாவில் வாழக்கூடிய சமுதாயங்களிலே முஸ்லிம்களிடம் நாட்டுப்பற்றும், அர்ப்பணிப்பும், நாடு விடுதலை பெறவேண்டும் என்று.

இந்த தேசத்தின்பால், இங்கு வாழ்கிற சகோதர சமுதாய மக்களின்பால் அன்பு கொள்ள வேண்டும். அவர்களின் சுக துக்கங்களில் பங்கு கொள்ள வேண்டும் என்ற கருத்தை மிக ஆழமாக தமுமுக பதிவு செய்திருக்கிறது.

சுனாமி பேரலைத் தாக்குதல் தமிழகத்தைச் சீண்டியபோது இந்துத்வாவின் முஸ்லிம் விரோதப் போக்கு சுனாமியோடு அடித்துச் செல்கிற அளவிற்கு முஸ்லிம்களின் சமூக சேவை ஓர் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது.

நெகிழ வைக்கக்கூடிய ஒரு சமபவத்தை மட்டும் இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நாகை மாவட்டத்தில் திருப்பூண்டி என்று ஒரு முஸ்லிம் கிராமம். அதற்கருகில் காமேஸ்வரம் என்ற ஒரு மீனவ கிராமம். சுனாமித் தாக்குதலால் அந்தக் கிராமம் முற்றிலுமாக பாதிக்கப்படுகிறது. அந்த மக்களைக் காப்பாற்றி, சிகிச்சை அளித்து, முகாம் அமைத்து பதினைந்து நாட்களுக்கு மேலாக அவர்களுக்கு உணவு போட்டதெல்லாம் த.மு.மு.க தலைமையில் திருப்பூண்டி முஸ்லிம்கள்தான்.

கடந்த மே மாதம் புதிய படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருக்கிறார்கள். அன்று பிடித்த மீனை மார்க்கெட்டில் விற்க மனமில்லாமல் த.மு.மு.க நிர்வாகிகளைச் சந்தித்து, ‘நாங்கள் உயிரோடு இந்தக் கரையில் நிற்பதற்கு நீங்கதான் காரணம்’ என்று சொல்லி அந்த மீன்களை வழங்கியுள்ளார்கள். ஊர் ஜமாத்து, ஊர் மக்கள் எல்லோரும் கொடுத்த ஒத்துழைப்பில்தான் உதவிகளைச் செய்தோம்’ என்று சொல்லிய நிர்வாகிகள் அந்த மீன்களை ஊர் முழுவதும் பிரித்துக் கொடுத்திருக்கிறார்கள். மூன்று நாட்களும் இப்படித்தான். ஆயிரம் இராம.கோபாலன்கள் மக்களை பிரிக்கக்கூடிய வேலைகள் செய்தாலும் அதையெல்லாம் மீறி இதுபோன்ற பணிகள் அவற்றையெல்லாம் தோல்வியுறச் செய்யும்.

உனக்கு எதனை நீ விரும்புவாயோ அதனையே பிறருக்கும் விரும்பு என்பது நபிமொழி. நாகை மாவட்டத்தில் சுனாமித் தாக்குதல் நடந்த டிசம்பர் 26 முதல் ஜனவரி 14 வரை காவல்துறையும் இருக்கிறது, ராணுவமும் இருக்கிறது& ஜெயலலிதா அவர்கள் சட்டமன்றத்தில் ராணுவம் வேடிக்கைதான் பார்த்தது ஸ்ன்று சொன்னார்கள். அது நாகப்பட்டினத்தைப் பொறுத்தவரை உண்மை. தமுமுக தொண்டர்கள்தான் பல சடலங்களை மீட்டிருக்கிறார்கள்.

இச்செய்தியை சென்னை பத்திரிகையாளர் நண்பர்தான் சொன்னார். நாகை கடலோரத்தில் ஒரு வீட்டில் இறந்துபோன உடல்களால் துர்நாற்றம் வந்திருக்கிறது. யாரும் போக அஞ்சிய நேரத்தில் முஸ்லிம் இளைஞர்கள் சென்று சடலங்களை எடுத்து மரியாதையோடு னீடக்கம் செய்திருக்கிறார்கள். ஏன் இப்படி செய்கிறீர்கள்-? என்று அவரிடம் கேட்டிருக்கிறார். இறைவனுடைய திருப்திக்காக அல்லாவுக்காகச் செய்கிறோம் என்றாராம். கொஞ்சம் வயது சிறுவர்கள் சொன்னது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது’ என்றார் அந்தப் பத்திரிக்கையாளர். த.மு.மு.கவின் வருகை தமிழகத்தில் ஒரு சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. உரிமை மறுக்கப்பட்ட முஸ்லிம் அல்லாத மக்களும்கூட தமுமுகவை அணுகுகிறார்கள்.


ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இந்த நிலை-?

இந்தியாவிலேயே இடஒதுக்கீட்டிற்காக அதிகமாக குரல் கொடுத்த மாநிலம் தமிழ்நாடுதான். அந்த நிலையில் தவறிவிட்டோம். இங்கிருந்த திராவிட கட்சிகளின் தலைவர்கள்தான் அதற்கு காரணம் என்று சொல்லமாட்டேன். முஸ்லீம்லீக்தான் காரணம். அவர்கள் கேரளாவில் தனி இடஒதுக்கீட்டை பெற்றிருக்கிறார்கள். ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். அதேவகையில் தமிழகத்திலும் கேட்போமே என்ற எண்ணம் கடுகளவு கூட இல்லை.

1995இல் தமுமுக தொடங்கிய பிறகு 1995 அக்டோபர் 30ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள இம்ப்பீரியல் அரங்கில் இடஒதுக்கீட்டிற்காக முதன்முதலாக ஒரு மாநாட்டை நடத்தினோம். இதைக் கண்ட அப்போதிருந்த காலஞ்சென்ற ஒரு முஸ்லிம் தலைவர் தனி இடஒதுக்கீடெல்லாம் சாத்தியமில்லை என்று அவர் நடத்தி வந்த பத்திரிக்கையில் விமர்சனம் செய்தார். இதில் அக்கறையற்றவர்களாக இருந்ததன் விளைவு என்னவென்றால் தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் முஸ்லிம்களின் பிரநிதிதித்துவம் மிக மிகக் குறைவாக இருக்கிறது. இங்கு முஸ்லிம் சமுதாயத்தின் பிரதிநிதித்துவம் குறைவாக இருக்கிற சூழலில்தான் தமுமுக இடஒதுக்கீடு அடைவதே எங்கள் இலட்சியம் என்று போராடுகிறது.

இடஒதுக்கீடு அடையும்வரை ஓயமாட்டோம் என்ற தாரக மந்திரத்தோடு 99இல் முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாடு சென்னை கடற்கரையில் நடத்தினோம். எதிர்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா வந்து பேசினார்கள். பாஜகவுடன் இனி ஒருகாலத்திலும் இணையமாட்டேன் என்று அப்போதுதான் சொன்னார். தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் ஒரு மதச்சார்பற்ற முன்னயி உருவாவதற்கு அந்த மாநாடுதான் அச்சாணியாக அமைந்தது.

இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் வேறென்ன சிக்கல்கள்?

ஆந்திராவில் சட்டமனறத் தேர்தல் வந்தபோது முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று ராஜசேகர் ரெட்டி அறிவித்தார். அதை தேர்தலில் வென்றதும் நிறைவேற்றுகிறார். தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் இடஒதுக்கீட்டை கொண்டு வருவதம் எந்தத் தடையுமே இல்லை. இங்கு 30% பேர்க்கான பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு இருக்கிறது. அதில் முஸ்லிம்களுக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு இருக்கிறது.

பிறகென்ன தனி இடஒதுக்கீடு என்று கேள்வி எழலாம். பி.சி பட்டியலில் 144 சாதியினர் இடம்பெறுகிறார்கள். அவர்களுடன் போட்டியிடுவதற்கு வலிமை பெற்றவர்களாக முஸ்லிம் சமுதாயம் இல்லை.

தமிழகத்தில் பெண்களுக்கான ஜமாத் அமைக்கப்பட்டுள்ளது. காலம் மாறியுள்ள சூழலில் முஸ்லிம்கள் ஏன் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது?

ஆரம்பத்தில் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நபிகள் நாயகம் காலத்தில் பெண்கள் தட்டுமுட்டுப் பொருளைப் போன்று மதிக்கப்பட்ட காலம். பெண்களுக்கென்று தனி சுயாட்சி அதிகாரம் உண்டு. அதேபோல பெண்களுக்கு சொத்தில் பங்குண்டு என்பதையும் அன்றைக்கே நிலைநாட்டிய மார்க்கமாகவும் இஸ்லாம் விளங்குகிறது. ஆண்களுக்கு மட்டும்தான் மணவிலக்கு கொடுக்கிற அதிகாரம் இருக்கிறது என்பதுதான் பரவலாகத் தெரிகிற விஷயம். பெண்களுக்கும் அந்த அதிகாரம் உண்டு. அதேபோல பெண்கள் பள்ளிவாசலில் வந்து தொழுகை நடத்துவதற்கும் உரிமை உண்டு.

ஜமாத் என்பதே ஒரு தவறான சொற்பிரயோகம் அதுவும் சில மீடியாக்களில் மிகப்படுத்தப்பட்ட செய்தியாக போயிற்று. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறது என்பதை யழரும் மறுக்க முடியாது. நம் மகளில் காவல்நிலையங்கள் அதிகமான வேலைப் பளுவோடுதான் தமிழ்நாடு முழுவதும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன என்பதும் உண்மை.

இஸ்லாம் வரதட்சணையை அங்கீகரிக்கவில்லை. ஆனால் யதார்த்தத்தில் பார்க்கும்போது வரதட்சணை வாங்கி நடக்கும் திருமணங்கள் அதிகமாகியுள்ளன. எங்களைப் போன்ற அமைப்புகள் அதற்கு எதிராக தீவிரப் பிரச்சாரங்கள் செய்து அதை எவ்வளவு தூரம் குறைக்க முடியுமோ அந்தப் பணிகளை செய்து வருகின்றன. ஜமாத் என்பது முஸ்லிம் ஆண்களும், பெண்களும் சேர்ந்த ஒரு சமூக அமைப்பிற்கான பெயர். கணவனால் கைவிடப்பட்டவர்கள், கொடுமைப்படுத்தப்பட்டவர்கள், வரதட்சணைக் கொடுமைக்கு ஆளானவர்கள் இவர்களுடைய வழக்கை எடுத்துக் கொண்டு அவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தரும் வழிமுறையைத்தான் பெண்கள் ஜமாத் கடைபிடிக்கிறது.

இம்ரானா பிரச்சனை பரபரப்பான செய்தி ஆக்க வேண்டும் என்பதற்காக மீடியாவில் உள்ள சிலரால் செய்யப்பட்டவேலை. அந்த விவகாரத்தில் மிகத் தெளிவாக டெல்லியிலிருந்து வரக்கூடிய பத்திரிகை வீடியோ ஆதாரம் மூலமாக கற்பழிப்பே நடக்கவில்லை என்பதை நிரூபித்திருக்கிறது. இம்ரானாவின் ஸ்டேட்மெனடையே பதிவு செய்திருக்கிறார்கள்.

ஸ்டோரி எப்படி ஆரம்பிக்கிறது என்றால், லோக்கல் ரிப்போட்டருக்கு ஒரு தகவல் கிடைக்கிறது. இம்ரானாவின் மாமனார் வீட்டிற்கு வந்து பணம் கொடுக்காவிட்டால் மீடியாவில் செய்தி போட்டுவிடுவோம் என்று மிரட்டுகிறார்கள். கடன் தொல்லையில் பாதிக்கப்பட்டதால் அவரால் பணம் கொடுக்க முடியவில்லை. முதலில் லோக்கல் கேபிள் டி.வியில் போடுகிறார்கள். பிறகு ஜி டி.வியில் வெளியிடுகிறார்கள். அடுத்த தேசம் முழுவதும் செய்தி பரவுகிறது. இதுபோன்று எல்லா சகங்களிலும் பரவுகிறது. இதுபோன்று எல்லா சமூகங்களிலும் நடக்கிறது. இதற்கு மட்டும் மதத்தின் பெயரைச் சூட்டி பரப்பாக்குவதை ஒரு பொறுப்பற்ற ஜர்னலிசமாக நான் கருதுகிறேன்.

கூட்டணி என்பது இங்கு பதவியை பெறுவதற்கான சந்தர்ப்பவாதமாக ஆகியிருக்கிறது. மதச்சார்பற்ற கூட்டணி என்பதற்கு உரிய அர்த்தம் இருக்கிறதா?

தமிழகச் சூழலில் மேலோட்டமாகப் பார்த்த்£ல் அந்த மாதிரியான எண்ணம் ஏற்பட்டாலும்கூட சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மதச்சார்பின்¬மையை முன்வைத்துதான் தேர்தலைச் சந்தித்தார்கள். நாற்பது தொகுதிகளிலும் இந்தக்கூட்டணி வெற்றியைப் பெற்றதற்கு மதச்சார்பின்மைதான் காரணமாக இருந்தது என்று சொல்லாம்.

பா.ஜ.கவின் கோட்டை என்று பலராலும சொல்லக்கூடிய நாகர்கோயில் ஆகட்டும், அல்லது கோயம்புத்தூர் ஆகட்டும் அங்கேயும் பிஜேபியின் ஆதரவு சரிந்துவிட்டது. மக்கள் சார்பற்ற ஆட்சியைத்தான் விரும்புகிறார்கள்.

அரசு ஊழியர்களுக்குக் கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் ஒருபுறம் இருந்தாலும் அதிமுக ஆட்சி நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் அதுவொரு இந்துத்துவா சார்பான ஆட்சிபோன்றுதான் இருந்தது. உதாரணமாக மதமாற்ற தடைச்சட்டம் கொண்டுவந்தது: நரேந்திரமோடியின் பதவியேற்பு விழாவில் ஜெயலலிதா பங்கு கொண்டது. தமிழக மக்களின் திருவிழாக்கள் போல் வழிபாட்டு உரிமைகளிலும் தலையிட்டது போன்ற சில காரணங்கள். ஒற்றை வழிபாட்டு முறையாக இருக்க வேண்டும். அதில் பன்முகத்தன்மை இருக்கக்கூடாது சந்திதானம் என்றால் அங்கு பலி கொடுக்கக்கூடாது என்ற மேல்சாதி வழிபாட்டு வழிமுறையைத் திணிப்பதற்காக கொண்டு வரப்பட்டதாக நினைக்கிறேன்.

 இங்கு தேவைக்கு மட்டும் மதச்சார்பற்ற தன்மையைப் பயன்படுத்தும் போக்கு இருக்கிறதல்லவா? 

தேவைப்கேற்ப பயன்படுத்தப்படுகிறது என்பதில் சந்தேகமில்லை. காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஈடுபாடு மற்றவர்களுக்கு இல்லை. மதச்சார்பற்ற தன்மையை கையில் எடுததால்தான் வெற்றிபெற முடியும் என்கிற ஒரு நிர்பந்ததமான சூழ்நிலைக்கு தள்ளப்ட்டிருக்கிறார்கள் என்பது உண்மை. சந்தர்ப்பத்திற்காக வேண்டி மதச்சார்பற்ற தன்மையை திமுக சில நேரங்களிலும், அதிமுக சில நேரங்களிலும் பயன்படுத்தி வந்திருப்பது உண்மை. வேறு வழியில்லாமல் அவர்கள் மதச்சார்பற்ற தன்மைக்கு ஆதரவாக இருக்கும்போது அதை ஆதரிக்கவேண்டிய ஒரு நிர்பந்தமான நிலைதான் இருக்கிறது.

 தேர்தல் நேரத்தில் மட்டுமே நீங்கள் கண்டுகொள்ளக்கூடிய நிலைமை இருக்கிறது. இதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

அந்த உணர்வு மிக அதிகமாக இருப்பதாகவே சொல்வேன். தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகள் கொடுப்பது. பிறகு அதை நிறைவேற்றாமல் ஏமாற்றுவது இதுதான் இன்றைய திராவிட கட்சிகளின் போக்காக இருந்து வருகிறது. இந்த சூட்சமத்தை தெளிவாக நீணர்ந்திருக்கிறோம்.

 கையில காசு வாயில தோசை என்று தமிழ்நாட்டில் ஒரு பழமொழி இருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் வரப்போகிறது. நிச்சயமா ஆதரவு கொடுத்தால் அடுத்தமுறை முதலமைச்சராக வரும்போது இடஒதுக்கீடு தருவேன் என்று ஜெயலலிதாக இந்த முறையும் சொன்னால் அதை ஏற்றுக்கொள்வதற்கு நாங்கள் தயராக இல்லை.

அதேபோன்று திமுகவை பொறுத்தவரைக்கும் மத்தியில் ஆட்சியில் முக்யிமான பங்கை வகித்திருக்கிறார்கள். தமிழகத்திற்குத் தேவையான பல திட்டங்களை மத்திய அரசில் நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தி நிறைவேற்றியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நிலையை உருவாக்கி முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அகில இந்திய அளவில் கொண்டுவருவதற்கு திமுகவும் முயற்சி செய்யவேண்டும். முஸ்லிம்கள் இனி இதுமாதிரியான பசப்பு வார்த்தைகளைக் காட்டி, சில சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தி ஏமாற்ற முடியாது என்பதை தெளிவாகச் சொல்லிக் கொள்கிறோம்.

வருகிற தேர்தலில் இதுதான் உங்கள் நிலைப்பாடா?

இதுதான் எங்கள் நிலைபாடாக இருக்கும். எங்களுடைய ஆதரவை நிர்ணயிக்கக்கூடிய முக்கியமான அளவுகோலாக அமையும். இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் பி.ஜே.பி தனித்துதான் இருக்கிறது. அவர்கள் தனித்துப் போட்டியிட்டால் ஜாமீன்கூட கிடைக்காது. அதுதான் யதார்த்தம். முதலில் அதிமுக முதுகீல் ஏறி சவாரி செய்தார்கள். பிறகு திமுக முதுகில் ஏறினார்கள்.

அடுத்தத் தேர்தலில் இன்றுள்ள நிரவரப்படி சொல்வதாக இருந்தால் முஸ்லிம்களுக்கு தனிஇடஒதுக்கீடு அளிக்கவேண்டும் இதுதான் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுகிறவர்களுக்குத்தான் எங்கள் ஆதரவு. அதோடு சேர்ந்து இன்னோரு விஷயத்தையும் சொல்ல விரும்புகிறேன். பாஜக எந்த அணியில் இருக்கிறதோ, அந்த அணிக்கு கண்டிப்பாக முஸ்லிம்கள் ஆதரவு தரமாட்டார்கள்.

சந்திப்பு; மணா, புதிய பார்வை செப்டம்பர் 16-30, 2005

Check Also

பத்திரிகையாளர் மோசஸ் படுகொலை: மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் கண்டன அறிக்கை