Breaking News

பாகிஸ்தான் பிரிந்திருக்கக்கூடாது ! தமிழன் எக்ஸ்பிரஸ் கேள்வித் திருவிழா 03

♠ மனித வாழ்க்கைக்கு அரசியல் அத்தியாவசியமா? ராமன், திருவொற்றியூர்.

நமது அன்றாட வாழ்வில் அரசியல் பாதிப்புகள் உண்டு. மின்சாரம் தடைப்பட்டு வியர்வையில் தவிக்கும்போது, ‘இதை யாரும் தட்டிக் கேட்க மாட்டார்களா? என்று ஏங்குகிறோம். ஒரு பொருளின் விலை ஏறும்போது, ‘எதனால் இவ்வளவு மாற்றம்’ என்று கேட்கிறோம். நமது தெருவின் சாலை பழுதடைந்தால், ‘சாலை ஏன் இப்படி இருக்கிறது? என்று உள்ளாட்சிப் பிரதிநிதியடம் சப்தம் போடுகிறோம். இவை எல்லாமே அரசியலோடு தொடர்புடைய விஷயங்கள்தான். எப்படி ஆன்மீகமும், பொருளாதாரமும் மனித வாழ்க்கைக்கு தேவையோ, அதே அளவுக்கு அரசயலும் தேவை என்பது நடைமுறை உண்மை.
அரசியலில் இரண்டு வகை உண்டு. கட்சிகளில் சேர்ந்து தேர்தலில் நேரடியாகப் பங்கேற்கும், போட்டியிடும் அரசியல் ஒரு வகை. கட்சிகளில் சேராமல், வாக்குகளை மட்டும் போட்டுவிட்டு, அதிகாரத்தை ஆட்டுவிக்கும் அரசியல் இன்னொரு வகை. இதில் ஏதாவது ஒன்றில் பெருன்பான்மை மக்கள் இருக்கிறார்கள்.

♠ இந்து மதத்தை விமர்சிக்கும் முதல்வர் கருணாநிதி பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நாஞ்சில் குமார், நாகர்கோவில்

கோயல் கூடாது என்று கூறவில்லை, கோயில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்றுதான் கூறுகிறேன் என்று தனது நிலைப்பாட்டை பராசக்தி படத்தின் வசனம் மூலமாகத் தெளிவுப்படுத்தியிருக்கிறார் முதல்வர்.
மதம் என்ற சொல்லுக்கு ‘வெளி’ என்று பொருள். சமயம் என்றால் ‘பண்படுத்துவது’ என்று பொருள். ‘மதமான பேய் பிடியாத்திருக்க வேண்டும்’ என்கிறார் வள்ளலார்.

மனிதநேயத்தை சிதைக்கின்ற மடமைகள் எந்தப்போர்வையில் இருந்தாலும், அது விமர்சனத்துக்கு உட்பட்டதே. னீண்மையில் விவேகானந்தரை முதல்வர் கருணாநிதி மனந்திறந்து புகழ்ந்திருப்பதைப் பத்திரிகைகளில் பார்த்தோம். அமெரிக்கா வரை சென்று இந்து மதப் பிரச்சாரம் செய்த விவேகானந்தரை மதித்துப் போற்றுபவர் எப்படி இப்படி இந்து மத எதிரியாக இருக்க முடியும்?

♠ தங்களை கவர்ந்த தமிழ் இலக்கிய நூல் எது-? ஏன்? க.சேகர், மதுரை

திருக்குறள்.

இலக்கியம் என்ற சொல்லிலேயே இலக்கியம் என்றால் என்ன என்பதற்கு விடையும் இருக்கிறது. இலக்கு+இயம்=இலக்கியம்! மனித குலத்திற்குச் சிறப்பான இலக்கை இயம்பக் கூடிய இலக்கியமாக திருக்குறள் இருக்கிறது.

மனிதர்கள் யாவரும் ஒரே ஆத்மாவிலிருந்துப் படைக்கப்பட்டவர்கள். எனவே, மனிதர்களிடையே பிறப்பினால் பேதம் இல்லை. மனிதர்களின் செயல்களே அவர்களின் சிறப்புக்கு வழி வகுக்கும் என்கிறது திருக்குர்ஆன்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்’ என்கிறது திருக்குறள்.

‘மனிதனைப் படைத்ததே இறைவனை வணங்க’ என்கிறது திருக்குர்ஆன்.

‘கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன் நற்றான் தொழாஅர் எனின்’ என்கிறது திருக்குறள்.

எனவே தமிழ் இலக்கியங்களில் என்னை மிகவும் கவர்ந்த நூல், காமத்துப்பால் அதிகாரத்தைத் தவிர்த்த திருக்குறள்தான்.

♠ சமீபத்தில் ரசத்த அரசியல் ஜோக்-? ஜோன்ஸ், விருகம்பாக்கம்

சித்ரா பௌர்ணமி அன்று வீடுகள், அலுவலகங்களில் விளக்குகளை ஏற்றி, இருண்ட தமிழகத்தில் ஒளியேற்ற ஓடி வாருங்கள் அம்மா என்று கோஷம் போடுமாறு தன் கட்சியினருக்கு ஜெயலலிதா இட்ட கட்டளை.

♠ சமீபத்தில் மெய் சிலிர்த்த சம்பவம்? எஸ். கார்த்திக், மதுரை

தன் தந்தையின் படுகொலை வழக்கில் தண்டனை வழங்கப்பட்டு, சிறையில் அடைக்கப்ட்டுள்ள நளினியை, பிரியங்கா சந்தித்துப் பேசியது.

♠ நம் நாட்டில் உள்ள தேசியத் தலைவர்களில் உங்களுக்கு யாரைப் பிடிக்கும்? கே.ஏ. சேக் மைதீன், நெல்லை

பலரையும் பிடிக்கும். அதில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு என் மனதில் முதன்மையான இடம் உண்டு. அரசர் குடும்பத்தில் பிறந்து, இந்தியாவின் பிரதமராக ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்ட்ட பிறகு ஏழை&எளிய சாமனிய மக்களின் நலனுக்காக குறுகிய காலத்தில் வீரியமான நடவடிக்கைகளைச் செய்தவர். நீண்ட நெடிய காலம் கிடப்பில் போடப்பட்ட மண்டல் ஆணைய அறிக்கையை துணிந்து செயலுக்குக் கொண்டு வந்து பிற்படுத்தப்பட்ட இந்திய மக்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்தியவர். அவரது ஆட்சி நீடித்தால் ஆதிக்கச் சக்திகளின் கொட்டம் அடங்கிவிடும் என்ற அச்சத்தின் காரணமாக மண்டலுக்கு எதிராக ஆதிக்க ஜாதியினர் பல சதிகளைச் செய்தனர். பாபரி மஸ்ஜித் பிரச்சினையை முன்வைத்து அத்வானியும், அவரது ஆட்சிக்கு எதிராக களத்தில் வீழ்த்தினர். இன்றும்கூட ரத்தப் புற்றுநோயினால் அவதப்பட்டநிலையிலும் சாமானிய மக்களுக்காக வி.பி.சிங் குரல் கொடுத்து வருகிறார். சில நேரங்களில் வீதிக்கும் வந்து போராடுகிறார்.

♠ பாகிஸ்தான் என்ற நாடு உருவாக்கப்படாமல் இருந்திருந்தால் இந்தியா வலிமை மிக்க வல்லரசாக்கி இருக்கும் என்பது பற்றி உங்கள் கருத்து என்ன? ரா. மகேஷ், மேட்டுப்பாளையம்

இந்தக் கருத்தில் எனக்கு நூறு சதவிகிதம் உடன்பாடு உண்டு. பிரிவினை என்பது இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளிலும் உள்ள மக்களுக்கு பெரும் இழப்பே. ஒருங்கிணைந்து இருந்தால் அணுசக்தி முதல் கிரிக்கெட் வரை வெல்ல முடியாத பெரும் வல்லரசாக நாம் உருவாகியிருப்போம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் நாட்டுப் பிரிவினையில் ஜின்னாவிற்கு எந்த அளவு பங்கு உண்டோ, அதே அளவு பங்கு காந்தியடிகள், நேரு, பட்டேல் மற்றும் ராஜாஜி முதலியோருக்கும் உண்டு என்பதை பிரிவினை தொடர்பான ஆவணங்களை படிக்கும்போது அறியமுடிகின்றது.

♠ தங்களின் இனிமையான இளமைக்கால நினைவு ஒன்றைச் சொல்லுங்கள்? ந.மாரி, நெல்லை

நான் சென்னை அரண்மனைக்காரன் தெருவில் உள்ள செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ-இந்தியன் உயர்நிலைப் பள்ளியில் படித்தவன். 11ம் வகுப்புடன் பள்ளிப்படிப்பு அப்போது முடிந்துவிடும். எங்கள் பள்ளியின் முதல்வர்களாக ஃபாதர் வைட் என்ற வெள்ளைக்காரர், பாதர் ஜான் பீட்டர் போன்ற மறக்க முடியாதவர்கள் இருந்தார்கள். பள்ளி இறுதி வகுப்பு படிக்கும்போது, ஃபாதர் இட்டியச்சன் என்பவர் முதல்வராக வந்தார். அதற்கு முன்பு இருந்த முதல்வர்களில் இருந்து வேறுபட்டு, மாணவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளும் போக்குடையவராக இருந்தார். பள்ளி இறுதித் தேர்வு எழுதுவதற்கு முன்பு, மாணவர்களால் பிரிவு உபச்சார விழாவிற்கு ஏற்பாடு செய்யப்படது. இதில் பங்கு கொள்ள இவரை அழைத்தபோது, தனது அனுபவத்தில் மிக மோசமான மாணவர்களாக எங்கள் வகுப்பு இருப்பதாகவும், எனவே தன்னால் இந்நிகழ்ச்சிக்கு வர இயலாது என்றும் தெரிவித்து விட்டார். இவருக்கு ஒரு பாடம் படித்துக் கொடுக்க எங்கள் வகுப்பு முடிவு செய்தது. விளைவு… அந்தப் பள்ளியின் வரலாற்றில், முதன்முறையாக ஆங்கிலோ இந்திய பள்ளி இறுதித் தேர்வில் மாநிலத்தில் முதல் பத்து ரேங்க் பெற்ற மாணவர்கள் எமது மாணவர்கள் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது, ஆறாவது, பத்தாவது என்று 5 ரேங்க்குகளைப் பிடித்து சாதனை படித்தார்கள். அந்த தேர்வு வெளியான நாள், இன்றும் இனிமையாக என் நினைவில் இருக்கின்றது.

கேள்வித் திருவிழா (05.05.2008-தமிழன் எக்ஸ்பிரஸ்)

Check Also

பத்திரிகையாளர் மோசஸ் படுகொலை: மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் கண்டன அறிக்கை