Breaking News

இந்துக்களை அழித்தாரா ஒளரங்கசீப்? தமிழன் எக்ஸ்பிரஸ் கேள்வித் திருவிழா 05

மாமன்னர் ஔரங்கசீப் இந்துக்களைக் கொன்றதாகவும், இந்து கோயில்களைக் கொள்ளையடித்தாகவும் பாடப்புத்தகங்களில் இருக்கின்றனவே! இது உண்மையாகத்தானே இருக்கும்? பா.சுரேஷ், விழுப்புரம்

பாடப் புத்தகங்களில் சொல்லப்பட்டவை எல்லாம் உண்மையில்லை. பல திரிப்புகள், பல இருட்டடிப்புகள் குறிப்பாக முஸ்லிம்கள் தொடர்பாக செய்திகளைச் சொல்லும் போது செய்யப்படுகின்றன. இதற்குப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. அதில் ஔரங்கசீப் பற்றிய வரலாறும் அடங்கும்.

இந்து விரோதப் போக்கை கடைப்பிடித்து அவர்கள் அனைவரையும் அழித்தொழிக்கும் செயலில் ஔரங்கசீப் ஈடுபட்டாரா என்ற கேள்விக்கு பிரபல வரலாற்றாசிரியர் பாபு நாகேந்திரநாத் பானர்ஜி தரும் விடையை உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன். இந்துக்களைக் கொன்று குவிக்கும் மனப்போக்கை உடையவராக ஔரங்கசீப் இருந்திருப்பாரேயானால் அவரது படையின் தலைமைத் தளபதியாக ஒரு இந்து எப்படி இருந்திருக்க இயலும் என்று கேட்கிறார் பானர்ஜி. இந்துக்களைக் கொல்வதுதான ஔரங்கசீப் பின் நோக்கம் என்றால் தலைமைத் தளபதியாகத் தகுதி வாய்ந்த ஒரு முஸ்லிம் அல்லவா அவர் நியமித்திருப்பார் என்றும் கூறுகிறார் பானர்ஜி.

ஔரங்கசீப்பை மதவெறியுடையவர் என்று யாரும் குற்றஞ்சாட்டக் கூடாது. அவரது அரசின் கொள்கைத் திட்டங்களை இந்துக்கள் தான் வகுத்து அளித்தார்கள். அவரது அரசின் கருவூல நிர்வாகப் பொறுப்பு இரண்டு இந்துக்களிடம்தான் ஒப்படைக்கப்பட்டது’ என்று கூறி ஔரங்கசீப்பின் நடுநிலை மனப்பான்மைக்குச் சான்று அளிக்கிறார் நாகேந்திரநாத் பானர்ஜி.

ஔரங்கசீப் ஆட்சியின்போது அவரது ராணுவத்தின் மிக உயர்ந்த பதவிகளில் ஜஸ்வந்த் சிங், ஜெயசிங் என்ற இரண்டு இந்து தளபதிகள் இருந்தனர். ராஜா ரஜ்ரூப், கபீர் சிங், அர்காநாத் சிங், பிரேம் தேவ்சிங், திலீப் ராய், ரஷிக் லால் குரோரி போன்ற இந்துக்கள் ஆட்சியின் முக்கியப் பொறுப்புகளில் இருந்துள்ளனர்.

‘முகலாய வரலாறு’ (Mugal History) என்ற நூலை எழுதியுள்ள சர்மா என்ற வரலாற்றாசிரியர், ஔரங்கசீப்பின் அரசவையில் உயர் அலுவலர்களாக 148 இந்துக்கள் பதவி வகித்தாக குறிப்பிடுகிறார்.

‘இந்துக் கோயில்களைக் கொள்ளையடித்து இடித்தார்’ என்று ஔரங்கசீப் மீது புனையப்படுவதும் கற்பனைதான் என்று சொல்கிறது ‘இத்தியஹாஸ் பரிச்சய’ (அறிமுக வரலாறு) என்ற வங்களாத்தில் 5ஆம், 6ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பயன்படுத்தப்பட்ட வரலாற்றுப் பாடநூல். அந்த நூலில் கோயில்களை இடித்துவிட்டு அங்கு பள்ளிவாசல்களைக் கட்ட வேண்டும் என்பதுதான் ஔரங்கசீப்பின் எண்ணமாக இருக்குமேயானால் இந்தியாவில் ஒரேயோரு கோயில்கூட நின்று கொண்டிருக்காது. கோயில்களை இடித்ததற்கு மாறாக கோயில்கள் கட்டுவதற்கு விசாலமாக நிலங்களை ஔரங்கசீப் வழங்கினார். காஷ்மீர், பனாரஸ் மற்றும் பல இடங்களில் இவ்வாறு கோயில்களுக்கு தானம் வழங்கியுள்ளார். இதற்காக இவர் வெளியிட்ட அரசு ஆணைகள் இன்றும் அங்கே உள்ளன’’ என்று கூறப்பட்டுள்ளது. வங்காளத்தில் பயன்படுத்தப்பட் புத்தகத்தை ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாமா என்று மனதில் உங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டால், மதுரை ஆதினத்தை தொடர்பு கொண்டு கேளுங்கள். மதுரை ஆதினத்திற்கு ஔரங்கசீப் அளித்துள்ள தானத்தைப் பற்றிய ஆதாரத்தை அவர்கள் அளிப்பார்கள்.

நான் குறிப்பிட்ட இதே பாட நூலில், ‘ஔரங்கசீப்பின் ஐம்பது ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் ஒரு இந்து கூட கட்டாயமாக இஸ்லாத்திற்கு மதம் மாற்றம் செய்யப்படவில்லை. இந்துக்களின் மத விவகாரங்களில் அவர் தலையிடவில்லை’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஔரங்கசீப் ஆட்சியின்போது ஹாமில்டன் என்ற ஆங்கில வரலாற்றாசிரியரும், ‘ஐம்பது ஆண்டுகால ஔரங்கசீப் ஆட்சியின்போது அனைவரும் தமது சொந்தவழியில் இறைவனை வணங்குவதற்கான உரிமை இருந்தது’ என்று குறிப்பிடுகிறார்.

வரலாற்றாசிரியரும், முன்னாள் ஒரிஸா ஆளுநருமான பி.என் பாண்டே, தான் எழுதியுள்ள ‘இஸ்லாமும், இந்திய கலாச்சாரமும்’ என்ற நூலில் வாரணாசியிலுள்ள காசி விஸ்வநாதர் கோயிலை இடிப்பதற்கு ஔரங்கசீப் உத்தரவிட்டார் என்பது உண்மை என்று குறிப்பிட்டுவிட்டு, அதற்கான காரணத்தையும் விரிவாக எடுத்துரைக்கிறார்.

அதாவது ஔரங்கசீப் தனது நண்பர்களான பல இந்து மன்னர்களின் குடும்பத்தினருடன், வங்காளத்திற்குச் செல்லும் வழியில் வாரணாசி வருகிறார். இவர்களுடன் வந்த இந்து இளவரசி ஒருவர் கோயிலுக்கு சாமி கும்பிடச் செல்ல, அவரை அந்தக் கோயில் பூசாரிகள் மானபங்கம் செய்துவிடுகின்றனர். ஔரங்கசீப்புடன் வந்த இந்து ராஜாக்கள் இதற்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ள, காசி விஸ்வநாதரின் சிலையை அப்புறப்படுத்தி வேறு ஒரு இடத்தில் வைத்தபின் கோயிலை இடிப்பதற்கு உத்தரவிடுகிறார் ஔரங்கசீப். பூசாரியும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுகிறார். இதனை விவரிக்கும் பாண்டே நூலில் ஔரங்கசீப் சீக்கிய, சமண இந்துக் கோயில்களுக்கு வழங்கியுள்ள தானங்களை ஆதாரங்களுடன் பட்டியல் போட்டுள்ளார்.

எனவே இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களில் உண்மையான வரலாற்றை நடுநிலையுடன் எடுத்துக் கூறும் நமது பாடநூல்கள் ஒட்டுமொத்தமாகத் திருத்தப்படுவதுதான் நாட்டில் சமூக நல்லிணக்கம் நிலைத்து நிற்கப் பெரிதும் உதவும்.

நம் நாட்டில் விவசாயிகள் பிரச்சினை பெரும் பிரச்சினையாக இருக்கிறதே..! இதற்கு விவாசயப் புரட்சி ஏற்படாதது தான் காரணமா? மு. கார்த்திக், மும்பை

எது சரியான விவாசயப் புரட்சி என்று அறியாமல் தடுமாறுவதுதான் காரணம். அந்தக் காலங்களில் கிராமப்புறங்களில் ஒரு குடும்பம் வாழப் பணம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படவில்லை. புளியை¬க் கொடுத்து பருப்புப் பெற்றுக் கொள்வார்கள். மிளகாள், மல்லி போன்ற அத்தியாவசியப் பொருட்களை இப்படிப் பண்ட மாற்று முறைப்படி பெற்று வாழ்ந்து வந்தார்கள். கடலையைச் செக்கில் இட்டு ஆட்டினால் மனிதர்களுக்கு எண்ணையும், கால்நடைகளுக்கு தீவனமாக புண்ணாக்கும் கிடைத்தது. மனிதர்களிடையே உறவும், அன்பும் உழைத்து உற்பத்தி செய்த பொருள்களும் மிகப் பெரும் மதிப்பையும் முக்கியத்வத்தையம் பெற்றிருந்தன. இந்தியாவின் இதயம், அதாவது கிராமங்கள் சீராக இயங்கிக் கொண்டிருந்தன.

தமிழில் மிக மோசமான வன்கொடுமைக்கு உட்படுத்தப்படும் சொல், ‘புரட்சி’ என்ற சொல்தான். அதுவும், ‘பசுமை புரட்சி’ என்று பறைசாற்றினார்கள். ‘பசுமை புரட்சி’ வருவதற்கு முன்பு இயற்கை உரஙகளான இலை, தழை, எரு இவற்றை இட்டு மண்ணின் வளத்தை மேம்படுத்தி, அதில் பயிர் செய்து பயன்படுத்தி வந்த ‘மரபு சார்ந்த வேளாண்மை முறை, நடைமுறையில் இருந்தது. 1967க்குப் பின் எம்.எஸ். சுவாமிநாதன் மேற்கொண்ட ‘பசுமை புரட்சி ’ என்பது மானத்தோடு வாழ்ந்து தானும் உண்டு, பிறருக்கும் உணவளித்து வந்த விவசாய மக்களை நுகர்வு வெறிகொண்டவர்களாக ஆக்கியது. ‘குறைந்த காலத்தில் அதிக உற்பத்தி’ என்ற முழக்கம்தான் பசுமை புரட்சியின் தாரக மந்திரமாக இருந்தது. இயற்கை உரங்கள் புறந்தள்ளப்பட்டு செயற்கை உரங்கள் திணிக்கப்பட்டன. இந்த அழிவு வேலையை அரசே முன்நின்று நடத்தியது. இதனால் மண்ணிர் உயிர்சத்து பிடுங்கி எடுக்கப்பட்டது. மண் மலடானது. நாடு பாலைவனமானது. இதனால் விவசாயி பிறக்கும் போதே கடனாளியாகப் பிறந்து, வாழ்ந்து கடனாளியாகவ சாகும் நிலை ஏற்பட்டது.

இதன் தொடர்ச்சியாக தற்போது ‘மரபஷ மாற்ற வேளாண்மை’ தலைதூக்கி வருகிறது. முந்தைய ‘பசுமை புரட்சி’, மண்ணை மலடாக்கியது. இன்றைய ‘மரபணு வேளாண்மை’ மனிதனை மலடாக்கியது. மரபணு மாற்ற வேளாண்மை, விவசாயப் புரட்சி தேவைதானா என்பதைச் சிந்திப்போம். நமது நாட்டின் விவசாயத்திற்கு தேவை, இயற்கை வேளாண்மைப் புரட்சி. அந்தப் புரட்சிக்கு வித்திடும் வல்லவர்கள் நமது தமிழகத்திலேயே இருக்கிறார்கள்.

கேள்வித் திருவிழா (15.05.2008-தமிழன் எக்ஸ்பிரஸ்)

Check Also

பத்திரிகையாளர் மோசஸ் படுகொலை: மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் கண்டன அறிக்கை