முஸ்லிம் சமுதாயம் இந்திய, இலங்கை மண்ணிலும் உலகளாவிய ரீதியிலும் முகங்கொடுக்கும் பிரச்சினைகள், கடும்போக்கு அமைப்புக்களின் கூட்டுச் செயற்பாடுகள், மத்திய அரசாங்கங்களின் கவனத்தில் கொள்ளாத நிலைமைகள், சிறுபான்மை சமூகங்களுக்கிடையில் குறிப்பாக தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் கட்டியெழுப்பப்பட வேண்டிய நல்லுறவுகள், தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விடிவெள்ளிக்கு வழங்கிய விசேட செவ்வி வருமாறு :
Q மத்தியில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில் உங்களின் நிலைப்பாடு எவ்வாறு உள்ளது?
பதில்: குஜராத்தில் முதலமைச்சராக இருந்தபோது அந்த மாநிலம் பாரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஆகவே இந்தியாவும் அவ்வாறான வளர்ச்சியை காணுவதென்றால் எம்மை ஆதரியுங்கள் என்ற பரப்புரையுடன் தான் 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்திருந்தார். இந்தப் பரப்புரை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டதும் குஜராத்தில் தேனாறும் பாலாறும் ஓடுகின்றன என்ற மாயைக்குள் அவர்கள் சென்று வாக்களித்தார்கள்.
ஆனால், ஒட்டுமொத்தமாக பார்க்கின்றபோது பா.ஜ.க.வுக்கு 31சதவீத வாக்குகள்தான் கிடைத்துள்ளன. ஆகவே 69 சதவீத வாக்குகள் மோடி தலைமையிலான பா.ஜ.கவுக்கு எதிராகவே அளிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் தேர்தல் முறை அவரை ஆட்சி அமைப்பதற்கு வழிசமைத்தது. அதனையடுத்தும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார். எனினும் அவை எவையும் நிறைவேற்றப்பட்டதாக இல்லை.
தற்போதைய சூழலில் விவசாயிகள், மீனவர்கள், வணிகர்கள் என அனைவருமே பாதிக்கப்பட்டு தற்போது நாடளாவிய ரீதியில் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர். இவையெல்லாம் பொருளாதார ரீதியாக மோடி அரசாங்கத்தின் குறைபாடுகளாக இருக்கின்றன. குறிப்பாக வர்த்தகத்தில் அதிகம் ஈடுபடும் முஸ்லிம்கள் மோடியின் ஒரே இரவில் கறுப்பு பண ஒழிப்பு என்ற பெயரில் ஆயிரம் ரூபா நாணயத்தாள்களை வைப்பிலிடச் செய்தமையினால் பெரும் பின்னடைவுகளைச் சந்தித்தார்கள். உலகில் பல்வேறு நாடுகளில் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைப்படுத்தப்படுகின்றது. ஆனால், இந்தியாவில் மாத்திரம் நான்கு மட்டங்களில் வெவ்வேறு விகிதங்களில் இந்தவரி விதிக்கப்படுகின்றது. இதனைவிடுத்து இனரீதியாகப் பார்க்கின்றபோது அங்கும் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.
மோடி தலைமையிலான அரசாங்கம் இன, மத சிறுபான்மையினருக்கு எதிரான கொள்கைகளை கொண்டது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமேயில்லை. இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தலித்துக்கள் ஆகியோர் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. மோடியின் அரசாங்கத்தில் மனிதர்களுக்கு இல்லாத பாதுகாப்பு பசுக்களுக்கு காணப்படுகின்றது. இறந்தவர்களை கொண்டு செல்வதற்கான காவு வண்டிகளே இல்லாதுள்ள நிலையில் உத்தரபிரதேசம் போன்ற பகுதிகளில் பசுக்களை கொண்டு செல்வதற்கான காவு வண்டிகளை செயற்படுத்துகின்ற மனநிலையில் தான் பா.ஜ.க. அரசாங்கம் இருக்கின்றது.
இதனைவிடவும் பசுவின் இறைச்சியை வைத்திருந்தார்கள், பசுத்தோலை உரித்தார்கள் என்று கூறி உண்மைகளை அறியாது முஸ்லிம்களை இலக்கு வைத்து பிரசாரங்களை மேற்கொண்டு திட்டமிட்ட தாக்குதல்களை குஜராத் போன்ற மாநிலங்களில் முன்னெடுத்துள்ளார்கள். இதனை விடவும் மோடி அரசாங்கம் தமிழர்கள் விடயத்தில் பெரும் வஞ்சனையைச் செய்கின்றது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை கருத்தில் கொள்ளவில்லை, காவிரி படுக்கைப்பகுதியை வேளாண்மை மண்டலமாக அறிவிப்பதற்குப் பதிலாக பெற்றோலிய மண்டலப்பகுதியாக அறிவித்துள்ளது. கூடங்குளம் அணு உலையில் மக்களை பாதுகாக்கக் கூடிய அளவிற்கு தொழில்நுட்ப வசதிகள் இல்லை என்று பிரமாண வாக்குமூலத்தினை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. நீட் தேர்வு, நியூற்றினோன் திட்டம் போன்றவற்றில் அநீதி இழைக்கின்றது. இவ்வாறு தமிழர்களை வஞ்சிக்கின்றது.
இவ்வாறான செயற்பாடுகளால் தான் கடந்த 12 ஆம் திகதி தமிழகம் வந்தபோது முழுமையான எதிர்ப்பினை தமிழர்கள் வெளியிட்டு எந்தவொரு இந்தியப் பிரதமரும் சந்திக்காத மிகப்பெரும் இகழ்ச்சியை சந்திக்க நேர்ந்துள்ளது. தனது சொந்த நாட்டில் சுதந்திரமாக பயணிக்க முடியாத சூழலொன்று பிரதமருக்கு ஏற்பட்டுள்ளமை அவர் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
Q தற்போதைய ஆட்சியில் சிறுவர், பெண்களின் பாதுகாப்பு பேசுபொருளாகியுள்ளமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:- கஷ்மீரில் கத்துவா என்ற மாவட்டத்தில் எட்டு வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு இலக்காகி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த அநாகரிகமான சம்பவம் ஒரு கோவில் கருவறையில் வைத்து நடத்தப்பட்டிருக்கின்றது. அந்த அப்பாவிப் பெண்ணுக்காக போராடுவதை விடுத்து அந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களுக்காக பா.ஜ.கவின் இரு அமைச்சர்களே வீதியில் இறங்கி போராடுவதையும், ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து அமைப்புக்கள் அந்த கோரச்சம்பவத்துக்கு ஆதரவளித்து பேரணி செல்கின்ற அவலமும் காணப்படுகின்றன. அதனை விடவும் பா.ஜ.க. தரப்பினரில் சிலர் ஆசிபா வளர்ந்தால் மிகப்பெரிய மனித வெடிகுண்டாக மாறிவிடுவார் அதனால் தான் அவரை அழித்தோம் என்று கூறுமளவிற்கு அவர்களின் பாசிச மனப்போக்கு காணப்படுகின்றது.
இதேபோன்று உத்தர பிரதேசத்தில் 17வயது சிறுமி வேலைவாய்ப்புக்கோரிச் செல்கின்ற போது பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரான குல்தீப் சிங் மற்றும் அவருடைய சகோதரரால் கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு இலக்காக்கப்படுகின்ற கொடுமையும் நிகழ்ந்துள்ளது. இவ்வாறு, பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம் சம்பந்தமான பல சம்பவங்கள் இந்த ஆட்சிக்காலத்தில் பதிவாகிக்கொண்டே இருக்கின்றன. இதனால் பெண்களின் பாதுகாப்பு என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. குறிப்பாக சிறுபான்மையின சமூகங்களைச் சேர்ந்த பெண்களின் எதிர்காலம் அச்சத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
Q தமிழகத்தில் உள்ள தமிழ் – முஸ்லிம் உறவினை முன்னுதாரணமாகக் கொண்டு இலங்கை சிறுபான்மை தேசிய இனங்களுக்கு நீங்கள் கூறவிழைவது என்ன?
பதில்:- 2009 ஆம் ஆண்டு மிகப்பெரும் துயரத்தினைத் தந்திருந்த சம்பவங்கள் நிகழ்ந்த பின்னர் நான் லண்டனுக்குச் சென்றிருந்தேன். அங்குள்ள ஈழத்தமிழர்களை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினேன். அவர்களின் நிலைப்பாடுகளை கேட்டு அறிந்து கொண்டேன். அதேபோன்று தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர்களின் நிலைமைகளையும் கேட்டறிந்து கொண்டிருந்தேன். இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலைமைகளையும் நிலைப்பாடுகளையும் பெற்றுக்கொண்டேன்.
அதன் பின்னர் இலங்கையில் உள்ள முஸ்லிம் சமூகத்துடனும் தொடர்ச்சியாக தொடர்புகளை பேணி வந்தேன். இவ்வாறான நிலையில் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் பங்கேற்பதற்காக நான் அங்கு வருகை தந்திருந்தேன். அச்சமயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த ஹாபீஸ் நஸீர் மற்றும் தமிழ்த் தேசிய தலைவர்கள் உள்ளிட்டவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தேன். அவை ஆரோக்கியமானதாகவே இருந்தன.
இலங்கையில் காணப்பட்ட அசாதாரண காலப்பகுதியில் நடைபெற்ற கசப்பான அனுபவங்களை மையப்படுத்தி யார் அதில் தவறிழைத்தார்கள். அதற்கான காரணங்கள் என்ன போன்ற பகுப்பாய்வுகளுக்கு முஸ்லிம்களும், தமிழர்களும் செல்லாது எதிர்காலத்தில் எவ்வாறு இணைந்து செயற்படுவது என்பது பற்றி சிந்திக்க வேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் சிங்கள பேரினவாதமும், பௌத்த மதவாதமும் உச்சமாக செயற்பட ஆரம்பித்துள்ளன.
குறிப்பாக கண்டியிலும், அம்பாறையிலும் அண்மித்த தினங்களில் நிகழ்ந்த சம்பவங்களை கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. திட்டமிட்ட வகையில் முஸ்லிம்களை தாக்குகின்ற சம்பவங்களாகவே பார்க்க வேண்டியுள்ளது. விசேடமாக அம்பாறை சம்பவத்தினை எடுத்துக்கொண்டால் இலங்கையில் முஸ்லிம்கள் பெரும்பாலான உணவகங்களை நடத்துகின்றார்கள். முஸ்லிம்களின் உணவுச்சுவையால் அங்கு மக்கள் அதிகமாக கூடுவதை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் முஸ்லிம் உணவகங்களில் உள்ள உணவுகளில் ஆண்மைக் குறைபாட்டு மாத்திரைகளை உணவுகளில் கலக்கின்றார்கள் என்ற திட்டமிட்ட பொய்ப் பிரசாரத்தினை மேற்கொண்டுள்ளார்கள்.
அதேநேரம், கண்டியில் நடைபெற்ற சம்பவத்தை கவனத்தில் கொள்ளும் போது உயிரிழப்புக்கள் இன்றி சொத்துக்களை அழிக்கும் ஒரு வியூகத்துடனே அந்த சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. அதில் பெண்கள் கூட சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு தூரம் பயிற்சி பெற்றுள்ளார்கள் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டியுள்ளது.
இவ்வாறான ஒரு தருணத்தில் அதனை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குள் சிறுபான்மையின சமூகங்களான தமிழர்களும், முஸ்லிம்களும் தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே இந்த விடயத்தல் இரு சமூகத்தினருமே இணைந்து ஒருமித்த நிலைப்பாட்டினை எடுப்பது காலத்தின் கட்டாயமாகவுள்ளது.
மேலும் சிறுபான்மை இனத்தவர்களை எவ்வாறு தாக்கமுடியும் என்பதற்கான வியூகத்தினை இந்தியாவில் இயங்கும் ஆர்.எஸ்.எஸ், இலங்கையில் இயங்கும் பொதுபலசேனா, மியன்மாரில் உள்ள 969 இயக்கம் ஆகியவை கூட்டாக இணைந்து அமைக்கின்றன.
அவர்கள் தீட்டிய சதித்திட்டத்தின் வெளிப்பாடாகவே மேற்படி வன்முறைகளைப் பார்க்க வேண்டியுள்ளது. இந்தியாவை எடுத்துக்கொண்டால் மத்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது இன, மத, மொழிவாரியான சிறுபான்மை இனத்தவர்களை தாக்குவதற்கு எத்தகைய வழிமுறைகளை கையாள்கின்றார்களோ அதேபோன்று தான் இலங்கையில் பொதுபலசேனா போன்ற அமைப்புக்களும் செயற்பட்டு வருகின்றன.
இலங்கையில் நடைபெற்ற ஈழப்போரானது சாதி, மதத்தினைக் கடந்து ஒரு இன விடுதலைக்காக நடைபெற்றது. அந்தப்போர் நிறைவுக்கு வந்த பின்னரான சூழலில் தற்போது மிகப்பெரிய இனவெறிக்குழுக்களை உருவாக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. ஏற்கனவே பொதுபலசேனா போன்ற அமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் தமிழர், முஸ்லிம் தரப்புக்களிலும் இனவாதக் குழுக்களை உருவாக்குவதை திட்டமாக கொண்டு முயற்சிகள் நடைபெறுகின்றன. இது அபாயகரமானது. இது இனங்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்துவதற்கு வழிவகுத்து விடும். ஆகவே இந்த அபாயத்திலிருந்து மீண்டுவருவது காலத்தின் கட்டாயமாகின்றது.
கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு கோரிக்கைகள், எதிர்பார்ப்புக்கள் இருக்கின்றன. அதேபோன்று வடமாகாண தமிழர்களுக்கு கோரிக்கைகள், எதிர்பார்ப்புக்கள் இருக்கின்றன. ஆகவே கோரிக்கைகள், எதிர்பார்ப்புக்கள் சம்பந்தமாக இரண்டு தரப்பினரும் ஒரு வட்டமேசையில் அமர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும். அவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவுக்கு வரவேண்டும்.
தற்போதைய சூழலில் இரு சிறுபான்மை சமூகத்தினதும் வாழ்வியலே கேள்விக் குறியாகியுள்ளது. ஆகவே வாழ்க்கையை உறுதிப்படுத்திக்கொண்டால் தான் உரிமைகள் தொடர்பில் பேச முடியும். எனவே அதற்குரிய திட்டமிடலை கூட்டாக மேற்கொள்ள வேண்டியுள்ளது.
Q ஆர்.எஸ்.எஸ், பொதுபலசேனா, 969 ஆகியவற்றுக்கிடையில் குணாம்ச ரீதியான தொடர்புகளை தாண்டி உறவுகள் உள்ளன என்கின்றீர்களா?
பதில்:- ஆர்.எஸ்.எஸ், பொதுபலசேனா மற்றும் 969 அமைப்பு ஆகியவற்றுக்கு இடையில் சிந்தனை ரீதியான தொடர்புகள் மட்டும் காணப்படவில்லை. ஆர்.எஸ்.எஸ். சேர்ந்த பிரமுகர்கள் இலங்கைக்கு சென்று பொதுபலசேனா போன்ற கடும்போக்கு அமைப்புக்களுடன் கலந்தாலோசித்துள்ளார்கள். எவ்வாறான வியூகத்தினை அமைத்து செயற்பட வேண்டும் என்பது தொடர்பிலான அனைத்து விதமான பயிற்சிகளையும் அளித்துள்ளார்கள். இது மட்டுமல்ல, தமிழர்களுக்கு மத்தியிலும் தமது வியூகத்தினை முன்னெடுப்பதற்காக சில குழுக்களை அமைத்துள்ளார்கள் என்பது யதார்த்தமாகும்.
Q இலங்கையில் உள்ள தமிழ், முஸ்லிம் உறவினை பலப்படுத்துவதில் உங்களது வகிபாகம் என்னவாக இருக்கும்?
பதில்:- இலங்கையில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் அனைவரையும் தமிழகத்திற்கு அழைப்பதற்கு திட்டமிட்டு வருகின்றோம். கடந்த கால கசப்புணர்வுகளை மறந்து தமிழர்களுடன் இணைந்து எதிர்காலத்தில் பயணிக்கும் முகமாக தமிழகத்தில் உள்ள தமிழ்த் தேசிய அமைப்புக்கள், கட்சிகள் , முஸ்லிம் கட்சிகள் என அனைவரையும் உள்ளடக்கிய ஒரு பெரும் கலந்துரையாடலை மேற்கொள்வதற்கு முயற்சிகளை எடுத்து வருகின்றோம். இது சாத்தியமாகின்றபோது பல்வேறு மாற்றங்களை இலங்கையில் காணமுடியும் என்பது எமது எதிர்பார்ப்பாகவுள்ளது.
Q இந்தியா உட்பட உலகளாவிய ரீதியில் வேகமாகப் பரவிவரும் முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்ற பொதுப்படை சிந்தனையை கட்டுப்படுத்துவதில் முஸ்லிம்களின் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும்?
பதில்:- முகத்தில் தாடிவைத்து, தொப்பி அணிந்தவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளாக சித்திரிக்கின்ற நிலைமை தான் தற்போது உலகளாவிய ரீதியில் உள்ளது. அதிலும் இந்தியாவில் அந்த தன்மை அதிகமாகவே உள்ளது. ஆகவே ஆசிய முஸ்லிம்களுக்கு என்னால் வழங்கக் கூடிய செய்தியாக இதனைக் கொள்ளமுடியும். அதாவது, நாங்கள் பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தில் தான் வாழுகின்றோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அத்துடன் முஸ்லிம்கள் என்றால் பயங்கரவாதிகள் என்ற ஏனைய தரப்புக்களின் மனநிலையை மாற்றும் வகையில் முற்போக்குடன் செயற்பட வேண்டும். அதாவது, ஏனைய சமூகத்துடன் வேறுபடக்கூடிய விடயங்கள் குறைவாகவும் ஒன்றுபடக்கூடிய விடயங்கள் அதிகமாகவும் இருக்கின்ற நிலையில் அதனை புரிந்து அந்தந்த சமூகங்களுடன் சகோதரத்துவத்தினை ஏற்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் நாம் செயற்பட வேண்டியுள்ளது.
இந்த விடயத்தில் ஒரு உதாரணத்தினைக் கூறுகின்றேன். 1995 ஆம் ஆண்டு தமிழ் நாட்டு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் என்ற அமைப்பினை உருவாக்கினோம். 2009 இல் தான் மனித நேய மக்கள் கட்சி என்று அரசியல் கட்சியாக மாற்றமடைந்தோம். இடைப்பட்ட காலத்தில் இரத்ததான சேவை, அம்புலன்ஸ் சேவை போன்ற பல மனிதநேய செயற்பாடுகளை முன்னெடுத்தோம். இவ்வாறான நிலையில் அண்மையில் தமிழகத்தில் வெள்ள அனர்த்தம் வந்தபோது எமது அமைப்பு உட்பட முஸ்லிம் தரப்புக்கள் களத்தில் செயற்பட்டன.
இந்த செயற்பாடுகள் எவ்வாறான தாக்கத்தினை ஏற்படுத்தியதென்றால், பாடசாலையில் தீவிரவாதி ஒருவரின் புகைப்படத்தினை வரையுங்கள் என்றால் குழந்தைகள் தொப்பியுடன் தாடியுடன் கூடிய ஒரு முஸ்லிமையே வரைந்தார்கள். ஆனால் மேற்படி அனர்த்தத்தின் பின்னர் அந்த அனர்த்தம் என்ற தலைப்பில் ஓவியம் வரையுங்கள் என்றால் உதவிப்பைகளுடன் வெள்ளத்தின் மத்தியில் உள்ள வீட்டுக்குள் செல்லும் முஸ்லிம் நபர் ஒருவரையே வரைகின்றார்கள்.
அந்தளவுக்கு மனநிலை மாற்றத்தினை இளம் சமூகத்தினர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான நல்லிணக்கப் பணிகளே தற்போது அவசியமாகவுள்ளன. பயங்கரவாதமும், தீவிரவாதமும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினை அளிக்கப்போவதில்லை. முஸ்லிம்களுக்கு இந்த விடயத்தில் உள்ள பொறுப்பினை உணர்ந்து அவர்கள் செயற்பட வேண்டும்.
Q இந்தியாவில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தினை உறுதிப்படுத்த எத்தகைய நடவடிக்கைகள் அவசியம் எனக் கருதுகின்றீர்கள்?
பதில்:- இந்தியா மதசார்பற்ற சோஷலிசக் குடியரசாக எதிர்காலத்திலும் நீடிக்குமா என்பதே மிகப்பெரும் கேள்விக்குறியாகவுள்ளது. ஆட்சியில் உள்ள பா.ஜ.கவும், அதற்குத் துணையாகவுள்ள ஆர்.எஸ்.எஸ். ஆகியன 1949ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச்சட்டம் உருவாக்கப்பட்ட காலத்திலேயே உலகத்திலேயே மிகச்சிறந்த சட்டத்தினை வழங்கியது மனுதர்மம். மனுதர்மத்தின் அடிப்படையில் அமையாத இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை ஏற்கமாட்டோம் என்று அறிவித்தனர். இதேநேரம் அண்மையில் மத்திய அமைச்சர் ஆனந்த்குமார் அதே கருத்தினை மீண்டும் கூறியுள்ளார்.
இந்தியாவில் மதச்சார்பின்மை என்பது மேற்கத்தேய மதச்சார்பின்மையிலிருந்து முற்றாக வேறுபட்டது. இந்தியாவில் மதச்சார்பின்மை என்பது அனைத்து மதங்களையும் அரவணைப்பதாகும். மீண்டும் மோடி தலைமையிலான பா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கு வருவார்களானால் அவர்கள் முதல்வேலையாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை திருத்துவதாக இருக்கும். ஆகவே இந்த ஆட்சியாளர்களால் அனைத்து தரப்பினருமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகளுக்கிடையில் பரஸ்பரம் கருத்து மோதல்கள் இருந்தாலும் இந்தியாவின் ஜனநாயகத்தினை பாதுகாத்து சோஷலிசத்தை காப்பதற்காக அனைத்து வேறுபாடுகளையும் மறந்து ஒற்றை அணியில் நிற்க வேண்டும்.
உத்தரப் பிரதேசத்தில் எதிரும் புதிருமாக விருந்த மாயாவதியும் அகிலேஷனும் இணைந்து யோகி ஆதித்தனாரின் தொடர்வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்து சமாஜவாதக் கட்சி கூட்டினை வெற்றிபெறச் செய்துள்ளனர். அதனை உதாரணமாக கொண்டு அரசியல் கட்சிகள் செயற்படுவதுதான் நாட்டுக்கும் மக்களுக்கும் செய்யும் அர்ப்பணிப்பாக இருக்கும்.
Q தமிழக ஆட்சியாளர் மீது கடுமை யான விமர்சனம் முன்வைக்கப்படுகின்ற நிலையில் உங்களது கட்சி அடுத்தகட்டச் செயற்பாடுகள் எவ்வாறு அமையவுள்ளன?
பதில்:- தமிழகத்தில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் உள்ள எடப்பாடி தலைமையிலான அரசாங்கமானது பொம்மை அரசாகவே உள்ளது. ஜெயலலிதாவுடன் எமக்கு அரசியல் ரீதியான முரண்பாடுகள் இருந்தாலும் அவர் மாநிலக் கொள்கைகளை ஒருபோதும் விட்டுக் கொடுத்ததில்லை. மாநிலக் கொள்கைகளை நிலைநாட்டுவதற்காக துணிச்சலாகப் போராடினார். ஆனால் தற்போதைய அரசாங்கம் அந்தக் கொள்கைகளையெல்லாம் குழிதோண்டிப் புதைக்கும் வகையில் தான் செயற்படுகின்றது.
காவிரி விடயத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தினை கூட்டுமாறு மாநில அரசாங்கத்தினை கோரியபோதும் அவர்கள் அதனை செவிசாய்க்காத நிலையில் தி.மு.க. தோழமைக் கட்சிகளுடன் கூட்டத்தினை நடத்தியது. இவ்வாறு எடப்பாடி அரசாங்கம் சம்பந்தமாக குற்றச்சாட்டுக்களை அடுக்கலாம். தமிழக மக்களின் உரிமைகளை பா.ஜ.கவிடம் அடகு வைத்த அரசாகவே எடப்பாடி அரசு உள்ளது. இந்த அரசாங்கத்தினை அகற்ற வேண்டும் என்பதில் நாம் உட்பட பொதுமக்களும் உறுதியாக இருக்கின்றார்கள். எமது கூட்டணி தி.மு.கவுடன் தொடர்ச்சியாக பயணித்துக் கொளளும்.
Q முஸ்லிம்களுக்கு எதிராக தெற்காசிய நாடுகளில் இனரீதியான நெருக்கடிகளும் மத்திய நாடுகளில் ஆயுத ரீதியான வன்முறைகளும் காணப்படுகின்ற நிலையில் அந்த சூழமைவுகளை மாற்றியமைப்பதற்கு ஏதுவான வழிகள் உள்ளனவா?
பதில்:- அனைத்து முஸ்லிம் அமைப்புக்களும் இதுபற்றி சிந்தித்து ஒருங்கிணைந்தால் மகிழ்ச்சிக்குரியதொரு விடயமாகும். ஆனால் அது எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்று என்னால் கூறமுடியாதுள்ளது. அதேநேரம் எம்மைப்போன்ற அமைப்புக்கள் இத்தகைய செயற்பாடுகளை எவ்வளவு தூரம் முன்னெடுக்க முடியும் என்பதிலும் கேள்விகள் உள்ளன.
பொதுப்படையாக பார்க்கையில் முஸ்லிம்களுக்கு அமெரிக்காவுக்கு எதிரான தீர்மானங்களை எடுக்க கூடிய துணிச்சல் இல்லை என்பதே யதார்த்தமாகவுள்ளது. உதாரணமாக கூறுவதாயின் முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பானது தற்போது இலங்கையில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையாக இருக்கலாம், சிறுமி ஆசிபா விவகாரமாக இருக்கலாம் அவற்றுக்காக குரல் கொடுத்திருக்கவில்லை. அத்தகைய அமைப்பொன்று மக்களை பாதுகாப்பதற்கான வலிமையான திட்டங்களை கொண்டிருக்கவில்லை. ஆகவே மக்களை மையப்படுத்திய திட்டங்களை கொண்ட அமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது. அதனை அனைத்து தரப்புக்களும் உணர்ந்து கொள்ள வேண்டியுள்ளது.
இலங்கையின் தலைநகரம் கொழும்பிலிருந்து வெளிவரும் விடிவெள்ளி நாளிதழுக்கு 04/05/2018 அன்று அளிதத் பேட்டி.